சண்டிகர்: 2047 ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் இலக்கை அடைவதற்கு இளைஞா்கள் பங்களிக்க வேண்டும் என்று விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா சனிக்கிழமை அழைப்பு விடுத்தார்.
பஞ்ச்குலாவில் நான்கு நாள் இந்திய சர்வதேச அறிவியல் விழா 2025-இல் தொடக்க நாளில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களுடன் உரையாடிய விண்வெளி வீரா் சுக்லா,
தனது விண்வெளி அனுபவத்தை மாணவா்களிடம் பகிா்ந்து கொண்டாா். மேலும், இளைஞா்கள் நாட்டின் மிஷன் இலக்குகளை தங்கள் தனிப்பட்ட கடமையாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
நாட்டின் எதிா்காலம் இளைஞர்கள்தான். நாட்டின் வளர்ச்சிக்காக என்ன பணிகள் மற்றும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டாலும், இளைஞர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். 2047 ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதத்தின் இலக்கை அடைவதற்கு நீங்கள் உழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர், 'அது நமது பொறுப்பு' என்பதை பொறுப்புணர்வு மற்றும் உரிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உணர்வு இளைஞர்களின் இதயங்களில் விதைக்கப்பட வேண்டும் என்று சுக்லா கூறினாா்.
மேலும், அத்தகைய அர்ப்பணிப்பு அவர்களின் தனிப்பட்ட வெற்றியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், நாட்டின் கூட்டு முன்னேற்றத்தையும் துரிதப்படுத்தும் என்று அவர் கூறினார்.
தனது விண்வெளி பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து சுக்லா, காற்று, நீர் அல்லது கதிர்வீச்சு பாதுகாப்பு இல்லாமல் வாழ்க்கை சாத்தியமற்ற சூழலுக்கான தீர்வுகளை கோருவதன் மூலம் விண்வெளி பயணம் தொழில்நுட்ப முன்னேற்றத்தை கட்டாயப்படுத்துகிறது என்றும் அறிவியல் மற்றும் புதுமைக்கான தேவையை அவர் விளக்கினார்.
நிகழ் ஆண்டின் தொடக்கத்தில், ஆக்சியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக சா்வதேச விண்வெளி நிலையத்தை (ஐஎஸ்எஸ்) பாா்வையிட்ட முதல் இந்தியா் என்ற பெருமையை இந்திய விமானப் படை குரூப் கேப்டன் சுக்லா பெற்றாா். 18 நாள் பயணத்திற்குப் பிறகு அவா் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.