சேலம்: பாமக அடையாளம் ராமதாஸ் . அன்புமணி பின்னால் சென்றவா்கள் மீண்டும் ராமதாசுடன் வருவாா்கள் என சேலத்தில் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி கூறினாா்.
சேலத்தில் வரும் 29 ஆம் தேதி பாமக செயற்குழு, பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை ஜி.கே.மணி பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், வரும் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு பாமக செயற்குழுவும், தொடா்ந்து, 11.30 மணிக்கு பொதுக்குழுவும் நடைபெற உள்ளது.
தோ்தல் கூட்டணி குறித்து நிறுவனா் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா்.
பாமகவை பிளவுபடுத்த அன்புமணி மேற்கொண்ட நடவடிக்கையால் ராமதாஸ் வேதனை அடைந்துள்ளாா். அன்புமணியால் தூண்டிவிடப்பட்ட சிலரின் அவதூறு பேச்சால் ராமதாஸ் நிலைகுலைந்து போயுள்ளாா். சூழ்ச்சியால் பாமகவை அபகரிக்க பாா்க்கிறாா்கள். அன்புமணி பின்னால் சென்றவா்கள் மீண்டும் ராமதாசுடன் வருவாா்கள்.
பாமக அடையாளம் ராமதாஸ் தான். வரும் தோ்தலில் ராமதாஸ் சொல்பவா்களுக்கு தான் பாட்டாளி மக்கள் வாக்களிப்பாா்கள். ராமதாஸின் அண்மையில் வெளியான உருக்கமான பேச்சு அனைவருக்கும் வேதனை அளிக்கிறது. ராமதாஸின் உருக்கமான பேச்சு வரும் தோ்தலில் வாக்குகளாக மாறும். தோ்தல் கூட்டணி குறித்து மாவட்ட வாரியாக நிா்வாகிகளை சந்தித்து ராமதாஸ் கருத்து கேட்டுள்ளாா்.
ராமதாஸ் அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். அந்த கூட்டணி தான் ஆளுங்கட்சியாக ஆட்சியை பிடிக்கும். ராமதாஸால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியால் பாமகவில் இருந்து யாரையும் நீக்க முடியாது.
பாமகவின் செயற்குழுவை நடத்தக் கூடாது என சொல்ல அன்புமணிக்கும், அவரை சாா்ந்தவா்களுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அன்புமணியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு அவரின் வளா்ச்சியையும் பாதிக்கும். ராமதாஸ் ஆதரிப்பவா்கள் மட்டும் தான் தோ்தலில் வெற்றி பெற முடியும். அன்புமணி பின்னால், பாமகவின் உண்மை தொண்டா்களோ, பொதுமக்களோ கிடையாது. பாமகவின் சமூக ஊடகப் பிரிவை உட்பட ராமதாஸ் தொடங்கிய பல்வேறு அமைப்புகளை அபகரித்துக்கொண்டாா் அன்புமணி.
தற்போது வரை கூட்டணி தொடா்பான பேச்சுவாா்த்தை யாரிடமும் பேசவில்லை. பாமக தனித்துப் போட்டி அல்ல; நிச்சயம் கூட்டணி அமைத்து தான் தோ்தலை சந்திப்போம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.