ஒசூர்: ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் என தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
ஒசூரில் தொழில் முதலீட்டு கழகம் சார்பில் ரூ.200 கோடி மானியத்துடன் கூடிய கடனை தொழில் முதலீட்டாளருக்கு வழங்கி அவர் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, தமிழ்நாட்டில் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தொழில் முதலீட்டு கழகத்தை மீட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்து சேர்த்தார். நாட்டில் யார் முதலீடு செய்ய வந்தாலும் அவர்கள் முதலில் தமிழக முதல்வரின் அலுவலக கதவை தட்டும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் தொழில் தொடங்க ஒற்றை சாளர முறையில் ஒரே இடத்தில் அனுமதி பெற்றுவிட்டால் அனைத்து தொழிற்சாலைகளையும் எளிதில் தொடங்க முடியும் என்ற அளவுக்கு திட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.
ஒசூருக்கு பல திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர், இன்னும் பல திட்டங்கள் ஒசூருக்கு அறிவிக்க உள்ளார். ஒசூரில் முதன் முதலில் தொழிற்சாலையை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி. அவர் 1970 இல் டிவிஎஸ் அசோக் லேலண்ட், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களை இங்கு முதலில் தொடங்கி தமிழக முழுவதும் பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார்.
நாட்டில் தமிழ்நாடு என்றும் தனித்துவமான மாநிலமாக திகழ்ந்து வருவதற்கு காரணம் அவர் போட்ட வித்து. நாட்டில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்த மாநிலத்தின் தலைநகரில் தொழில் வளர்ச்சி இருக்கும். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை காண முடியும். இதற்காக முதல்வர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்நாட்டின் வரைபடத்தில் ஒசூர், ஸ்ரீபெரும்புதூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி என கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் எங்கே கை வைத்தால் அங்கு தொழில்துறை கண்டிப்பாக இருக்கும். இதனை அரசு மட்டும் செய்யவில்லை தொழில்துறையினரும் இணைந்து தான் செய்துள்ளனர். தமிழர்கள் தனித்துவம் மிக்கவர்கள். அவர்களின் உழைப்பால் தொழில்துறை வளர்ந்துள்ளது. தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
தமிழகத்தில் தொழில் முதலீட்டு கழகம் சார்பில் ரூ.2500 கோடி மானியத்துடன் கூடிய கடனை வழங்கி உள்ளோம். அதில் தமிழகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களில் 99 சதவிகிதம் பேர் கடனை திருப்பி செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் எந்த துறையை எடுத்தாலும் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இன்று தமிழகத்தில் தொழில்துறையில் ஆட்டோமொபைல் துறை, எலக்ட்ரானிக்ஸ் துறை, தோல் அல்லாத காலனி உற்பத்தியில், தோல் பொருள்கள் தயாரிப்பு, பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
நாட்டில் ஆட்டோமொபைல் துறையில் 40 சதவிகிதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டில் மின்சார வாகனங்கள் உற்பத்தி விற்பனையில் நான்கு சக்கர வாகனங்கள் 40 சதவிகிதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இருசக்கர வாகனத்தில் 70 சதவிகிதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் பெரும்பான்மையான உற்பத்தி ஒசூரில் நடைபெறுகிறது. அனைத்து துறைகளிலும் முதன்மையான இடத்தில் இருப்பது தமிழகம்.
தொழில் முனைவோர் தமிழக அரசுக்கு இந்த வளர்ச்சியில் அரசுக்கு துணையாக நிற்பது தொழில் முதலீட்டாளர்கள். இருவரும் இணைந்து அற்புதமான வேலையை செய்வதால் தான் தமிழகம் இந்தளவுக்கு வளர்ச்சி பெற்று உள்ளது.
தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை அடைய முதல்வர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு தொழில் முனைவோர் முறையான ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஓசூரில் 800 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அங்கு தொழிற்சாலை நிறுவ ஆய்வு செய்யப்படும் என கூறினார்.
இந்தக் விழாவில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொழில் முதலீட்டு கழகத்தின் செயலாளர் அருண்ராய், தொழில் முதலீட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் சசிகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் கே. கோபிநாத், ஒசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ்,கிருஷ்ணகிரி எம்எல்ஏ மதியழகன், தளி எம்எல்ஏ டி . ராமச்சந்திரன்,ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 500-க்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.