முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

Updated On : 21 பிப்ரவரி, 2025 at 10:00 AM
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பகிர்:

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருப்பத்தூரை சேர்ந்த பெண் தனது உறவினருடன் கிருஷ்ணகிரி மலைக்கு அண்மையில் சென்றார். அப்போது அந்தப் பெண்ணை 4 இளைஞர்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 2 பேர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் இரண்டு பேரும் கிருஷ்ணகிரி அருகே பொன்மலைகுட்டை என்னுமிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீசார் வெள்ளிக்கிழமை சென்றனர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த குற்றவாளிகள் சுரேஷ், நாராயணன் இருவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், சுரேஷின் வலது காலில் குண்டு பாய்ந்தது. மற்றொரு குற்றவாளியான நாராயணன் பாறையில் இருந்து குதித்த போது, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளிகள் தாக்கியதில் காவலர்கள் குமார், விஜயகுமார் ஆகிய 2 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .

முழு கட்டுரையைப் படிக்க →