புதுச்சேரியில் கடந்த டிசம்பரில் மீண்டும் விமான சேவை தொடங்கியபோது அதனை வரவேற்கும் விதமாக விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.  ENS
தற்போதைய செய்திகள்

காற்றாடும் விமான நிலையங்கள்!

செயலற்ற நிலையில் காணப்படும் சிறிய நகர விமான நிலையங்கள் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டில் சிறிய நகரங்களில் சமீப ஆண்டுகளில் திறக்கப்பட்ட விமான நிலையங்கள் பெரும்பாலும் செயலற்ற நிலையிலே காணப்படுகின்றன.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விமானப் போக்குவரத்தை கொண்டுவரும் பொருட்டு சிறிய நகரங்களில் விமான நிலையங்களை ஏற்படுத்துவதில் மத்திய அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், உண்மையில் இந்த விமான நிலையங்கள் பயணிகளை ஈர்க்க போராடி வருகின்றன.

சமீபமாக திறக்கப்பட்ட சிறிய நகர விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு சரியாக இருந்தபோதிலும், அவை சரியாக செயல்படவில்லை என்பது இந்திய விமான நிலையங்கள் ஆணைய தரவுகள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

உதாரணத்துக்கு, யூனியன் பிரதேசமான புதுச்சேரி விமான நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு தொடர்ந்து 8 மாதங்களாக ஒரு திட்டமிடப்பட்ட விமானம்கூட இல்லை. 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த டிச. 20 அன்று பெங்களூரில் இருந்து 78 இருக்கைகள் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று புதுச்சேரி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

புதுச்சேரியில் கடந்த டிசம்பரில் மீண்டும் விமான சேவை தொடங்கி வைத்த ஆளுநர், முதல்வர்.

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்களை இயங்கிவந்த ஸ்பைஸ் ஜெட், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கடந்த மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவையை நிறுத்தியது. அதன்பிறகு, 8 மாதங்களுக்குப் பிறகு இண்டிகோ நிறுவனம் தற்போது விமான சேவையைத் தொடங்கியுள்ளது. இதுவும் எந்த அளவுக்கு தொடரும் என்று தெரியவில்லை.

புதுச்சேரி மட்டுமின்றி உத்தர பிரதேசத்தில் உள்ள குஷிநகர், மகாராஷ்டிரத்தில் உள்ள சிந்துதுர்க் போன்ற புதிய விமான நிலையங்களில் குறைவான பயணிகளே வருவதால் பெரும்பாலும் அவை செயலற்ற நிலையிலே இருக்கின்றன.

மத்திய அரசின் பசுமைத் திட்டங்களில் ஒன்றான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் கடந்த 2021 அக்டோபர் மாதம் திறக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமானங்கள் எதுவும் இயங்கவில்லை. உத்தரப் பிரதேசம், அண்டை மாநிலமான பிகாரை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் புத்த துறவிகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது செயலற்ற நிலையில் உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூல், சிக்கிமில் உள்ள பாக்யோங், மகாராஷ்டிரத்தில் உள்ள சிந்துதுர்க் உள்ளிட்ட பிற புதிய விமான நிலையங்களும் செயலற்றுக் காணப்படுகின்றன. சிந்துதுர்க் விமான நிலையம் கோவா கடற்கரையொட்டி காணப்படுவதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் ஸ்பைஸ் ஜெட் விமானங்களை இயக்குவதை நிறுத்தியது.

மகாராஷ்டிரத்தில் உள்ள சோலாப்பூர் விமான நிலையம், 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது இயக்கத்தில் இல்லை.

சில விமான நிறுவனங்களும் இதனை ஒப்புக்கொள்வதுடன் இந்த நிலை தொடர்ந்தால் விமான நிறுவனங்களுக்கு கடினமான சூழ்நிலையாக இருக்கும் என்கின்றன.

கோப்புப்படம்

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஸ்டார் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிம்ரன் சிங் திவானா,

'உடான் திட்டத்தின் கீழ் டிக்கெட் விலை வரம்பு, 2, 3 ஆம் நிலைகளில் உள்ள நகரங்களுக்கு விமானப் பயணத்தை மிகவும் மலிவாக மாற்றியுள்ளது. இருப்பினும், சில வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கையை பராமரிப்பது ஒரு சவாலாகவே இருக்கிறது. குறைவான பயணிகள் இருக்கும்பட்சத்தில் சிறிய நகர விமான நிலையங்களுக்கு விமானப் போக்குவரத்து சேவை மேற்கொள்வது கடினம்' என்று கூறியுள்ளார்.

கரோனா முடக்கம், சில விமான நிறுவனங்கள் முடங்கியது, விமானங்களில் அடிக்கடி ஏற்படும் கோளாறுகள் உள்ளிட்டவையும் விமானப் போக்குவரத்து குறைந்ததுக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக மக்களவையில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் கூறியுள்ளார்.

எனினும் 2047 ஆம் ஆண்டுக்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கையை இருமடங்காக்க(தற்போது 157; 2047ல் 350) அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறினார்.

ராஜஸ்தானின் அல்வார் , மத்திய பிரதேசத்தின் சிங்ரவுலி, தமிழகத்தின் பரந்தூர் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு, விளைநிலங்கள் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT