மகாராஷ்டிரத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை அப்பகுதி மக்கள் பிடிக்க முயன்றபோது அது தாக்கியதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புணே மாவட்டத்தின் மவல் பகுதியில் இன்று (மார்ச் 7) காலை 8 மணியளவில் பெண் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. அப்போது, அப்பகுதி மக்கள் அந்த சிறுத்தையை விரட்டியதால் அது பாவனா ஏரியின் அருகிலுள்ள முகாமின் ஓர் மரத்தின் மீது ஏறி அமர்ந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், மக்களில் சிலர் அது அங்கிருந்து செல்லும் வரை காத்திருக்காமல் அந்த சிறுத்தையை பிடிக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில், மக்களின் கூச்சலினாலும் அப்பகுதி நாய்கள் தொடர்ந்து குரைத்ததினாலும் தூண்டப்பட்ட அந்த சிறுத்தையை மரத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் அனைவரும் அந்த சிறுத்தையை கயிற்றாலும் வலையாலும் பிடிக்க முயன்றுள்ளனர்.
இந்த முயற்சியின்போது அந்த சிறுத்தை தாக்கியதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த வனத்துறையினர் அந்த சிறுத்தையை பிடித்து பவ்தானிலுள்ள முகாமிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: தில்லி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் அந்த சிறுத்தையை சீண்டாமல் அமைதியாக இருக்குமாறு மக்களிடம் பலமுறை அவர்கள் அறிவுறுத்தியும் கேட்காமல் அதனை நோக்கி கூச்சல் எழுப்பி செல்போன்களில் விடியோ எடுக்க முயன்றதாகவும் இதனால் பயந்த அந்த சிறுத்தை அவர்களை தாக்கியதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், 27 கிலோ மட்டுமே எடையுள்ள அந்த சிறுத்தை வளர்ந்து வரும் குட்டியென்றும் அதற்கு பதிலாக நன்கு வளர்ந்த சிறுத்தையாக இருந்திருந்தால் நிலைமை மிகவும் மோசமானதாக ஆகியிருக்கக் கூடும் எனவும் அந்த கூட்டத்தினர் அமைதியாக இருந்திருந்தால் தானாகவே அந்த சிறுத்தை அங்கிருந்து சென்றிருக்கக் கூடும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆபத்தான முறைகளின் அந்த சிறுத்தையை பிடிக்க முயன்ற அப்பகுதி மக்கள் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.