டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை செய்தது. அப்போது சோதனையின் முடிவில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்தது.
பின்னர் இது தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் விசாகன் உள்ளிட்ட டாஸ்மாக் நிறுவனத்துடன் தொடர்புடைய அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து டாஸ்மாக் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி ஏ.ஜி. மாசிஹ் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது. ஒரு அரசு நிறுவனத்தின் மீது நேரடியாக எப்படி குற்றம் சுமத்த முடியும்? நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக வரம்புமீறி நீங்கள்(அமலாக்கத் துறை) செயல்படுகிறீர்கள்
முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மீது விசாரிக்கலாம், ஒட்டுமொத்த நிறுவனத்தையும் நீங்கள் எப்படி விசாரிக்கலாம்?
டாஸ்மாக், அரசு சார்ந்த நிறுவனமாகும். தனி நபர்கள் செய்த விதிமீறலுக்காக ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் விசாரிப்பதா?" என்று பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவும் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.