நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  Center-Center-Chennai
தற்போதைய செய்திகள்

கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அறச்சிந்தனை கன்னட அமைப்புகளுக்கு இல்லையே ஏன்?: - சீமான் கேள்வி

வரலாற்று பேருண்மையை கூறியதற்காக கமல்ஹாசனை மிரட்டும் கன்னட அமைப்புகளுக்கு கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அறச்சிந்தனை இல்லையே ஏன்?

DIN

வரலாற்று பேருண்மையை கூறியதற்காக கமல்ஹாசனை மிரட்டும் கன்னட அமைப்புகளுக்கு கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அறச்சிந்தனை இல்லையே ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,

தக் லைஃப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், உலகநாயகன் கமல்ஹாசன் 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று உண்மையை கூறியதற்காக அவரது படங்களை கர்நாடாகவில் திரையிட விடமாட்டோம், அவரை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம் என்றெல்லாம் ஒருசில கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுப்பதும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடிபணியவைக்க நினைப்பதும், தக் லைஃப் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்து அவமதிப்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.

வரலாற்றுப் பேருண்மை

இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகளுக்கு மட்டுமல்ல உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்மொழிதான் என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட வரலாற்றுப் பேருண்மையாகும். அந்த வரையறைக்குள் கன்னட மொழியும் அடங்கும் எனும்போது அதை ஏற்பதில் கன்னட அமைப்புகளுக்கு என்ன சிக்கல்? அதிலும் கமல்ஹாசன் நாமெல்லாம் சகோதர மக்கள் எனும் பொருள்படும்படியாகவே அக்கருத்தினை அந்த இடத்தில் தெரிவித்திருந்ததை, அவரது பேச்சை முழுமையாக உள்வாங்கும் அனைவராலும் எளிதாக உணர முடியும்.

ஆனால், தமிழ்மொழி தோன்றி வளர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, அதிலிருந்து கிளைத்த மொழி கன்னடம் என்ற வரலாற்று உண்மையை ஏற்க மனமில்லாத கன்னட வெறியர்களே, இத்தனை வன்முறை பேச்சுக்களையும் மிரட்டல்களையும் விடுக்கின்றனர். அதனை கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசும் கண்டித்து தடுக்காது ஊக்குவிக்கின்றது என்பதுதான் பெருங்கொடுமையாகும்.

கன்னட மொழிக்கு பெருமைதானே

தமிழிலிருந்து கன்னடம் உருவானது என்பது கன்னட மொழிக்கு பெருமைதானே தவிர சிறுமை அல்ல; ஒருவேளை அந்த கருத்தில் கன்னட அமைப்புகளுக்கு மாற்றுக்கருத்து ஏதேனும் இருந்தால், தமிழைவிட கன்னடம்தான் மூத்த மொழி என்பற்கான வரலாற்று ஆதாரங்களை, இலக்கியச் சான்றுகளை, மொழியறிஞர்களின் ஆய்வு முடிவுகளைத் தந்து அறவழியில் மறுக்க வேண்டும்; ஆக்கப்பூர்வமான வாதங்களை முன்வைக்க வேண்டும்!

என்ன மாதிரியான அணுகுமுறை?

அதையெல்லாம் விடுத்து, கமல்ஹாசனை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம், அவரது படங்களைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?

கர்நாடாகவில் தமிழ் படங்கள்தான் திரையிடப்படுகிறதா?

தமிழ் படங்கள்தான் கர்நாடாகவில் திரையிடப்படுகிறதா? கன்னட படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்படவே இல்லையா? கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை அங்கே திரையிட அனுமதிக்காவிட்டால், ஒரு கன்னட திரைப்படத்தைக்கூட தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று பதிலுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தை முன்னெடுத்தால் அது ஆக்கப்பூர்வமானச் செயலாக இருக்குமா?

கன்னட அமைப்புகளுக்கு அறச்சிந்தனை இல்லையே ஏன்?

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்று சொன்ன கன்னட திரைக்கலைஞர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் திரையிட தமிழர்கள் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே? இன்னமும் அந்த நடிகர்களின் திரைப்படங்கள் தமிழ் நாட்டில் திரையிடப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன? தமிழர்கள் அதனை அனுமதித்துக் கொண்டுதானே இருக்கின்றோம்? கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அத்தகைய அறச்சிந்தனை கன்னட அமைப்புகளுக்கு ஏன் இல்லை?

கன்னட அமைப்புகள் விரும்புகின்றனவா?

ஒருவேளை தமிழர்கள் அறச்சீற்றம் கொண்டு அப்படங்களை எல்லாம் தடுக்க முனைந்தால் தமிழ்நாட்டில் ஒரு கன்னடப் படத்தைக்கூட திரையிட முடியாதச் சூழலை ஏற்படுத்த முடியும். அவற்றைத்தான் கன்னடவெறி அமைப்புகள் விரும்புகின்றனவா? அப்படி ஒரு எதிர் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்கு தமிழர்களை கன்னட அமைப்புகள் தள்ளமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஏற்கனவே, காவிரி நதிநீர் போராட்டத்தின்போது முதல்வர் ஸ்டாலின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், இறுதி மரியாதை செய்தும் கன்னடவெறி அமைப்புகள் அவமதித்தபோது எவ்வித எதிர்வினையும் ஆற்றாது தமிழ்நாடு அரசு அமைதியாக கடந்துபோனதைப்போல, தற்போதும் கடந்துபோகக்கூடாது. உண்மையறியாது போராடும் கன்னட இனவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்த்திரையின் பெருமைமிக்க கலை அடையாளம் கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியவில்லை என்று அவமதிக்கின்றார்.

ஆனால், அதற்கு பதிலடி தரவேண்டிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் கமல்ஹாசனை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கின்றீர்கள். எனவே, கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரசு அரசிடம் பேசி, போராடும் கன்னட அமைப்புகளைக் கட்டுப்படுத்தி தேவையற்ற பதற்றத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

61அடி உயர பீலிக்கான் முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!

8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த மோடி அரசை பாராட்டுகிறேன்: ப. சிதம்பரம்

GST வரி குறைப்பு! 8 ஆண்டுகளுக்குப் பிறகு தவறை உணர்ந்த அரசுக்கு பாராட்டுகள்! - ப. சிதம்பரம்

பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

வெளிச்சமும் நிழலும்... அபர்ணா பாலமுரளி!

SCROLL FOR NEXT