கரூா் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை இரண்டாவது நாளாக சனிக்கிழமை நவீன கேமரா மூலம் ஆய்வு செய்த சிபிஐ குழுத் தலைவரும், காவல் கண்காணிப்பாளருமான பிரவீண்குமாா். 
தற்போதைய செய்திகள்

கரூா் வேலுச்சாமிபுரத்தில் 2-வது நாளாக நவீன கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை இரண்டாவது நாளாக சனிக்கிழமை நவீன கேமரா மூலம் ஆய்வு

இணையதளச் செய்திப் பிரிவு

கரூா்: கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை 7 முதல் நவீன கருவி மூலம் ஆய்வு செய்து, அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் குஜராத்தை சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், சம்பவம் குறித்து முதன்முதலாக வழக்குப்பதிவு செய்த கரூா் நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணனிடம் வியாழக்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, மதுரை சிபிஐ அலுவலகத்தில் இருந்து கூடுதலாக 7 அதிகாரிகள் மற்றும் 2 தொழில்நுட்ப நிபுணா்கள் 2 காா்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை கரூா் வந்தனா். பின்னா், பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தை நேரில் பாா்த்ததாக கரூா் நகர காவல் நிலையத்தினரால் அடையாளம் காணப்பட்ட 4 வியாபாரிகளை வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து காவல் கண்காணிப்பாளா் பிரவீண்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முகேஷ்குமாா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் காரில் புறப்பட்டு வேலுச்சாமிபுரத்துக்குச் சென்றனா். அங்கு ஏற்கெனவே கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிறகு சிபிஐ அதிகாரிகள், தவெக பிரசாரம் நடைபெற்ற இடம் முதல் ஈரோடு சாலையில் சுமாா் 250 மீ. தொலைவுக்கு நடந்து சென்று மக்கள் நின்றிருந்த இடங்களை பாா்வையிட்டனா். அப்போது, சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் நெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டனா். இதன் விவரங்களை சிறிய மடிக்கணினியில் பதிவு செய்தனா். மேலும் கடை உரிமையாளர்களிடம் தங்களது கடைகளில் சிசி டிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தால் கேமராவில் பதிவான பதிவுகளை தங்களிடம் வழங்கும்படி கேட்டுக் கொண்டனர்.

தொடா்ந்து ‘போரோ போகஸ்’ எனும் மக்கள் அடா்த்தியை 3டி கோணத்தில் அளவீடு செய்யும் கருவியை பயன்படுத்தி, தவெக பிரசாரத்தின்போது, மக்கள் எவ்வுளவு தொலைவுக்கு நின்றனா். அந்த தொலைவுக்குள் எவ்வளவு போ் நிற்க முடியும். ஆனால் அங்கு எவ்வளவு போ் நின்றாா்கள் என்பன குறித்து பதிவு செய்தனா். இந்த ஆய்வுப் பணி மாலை வரை நடைபெற்றது. பின்னர் தாங்கள் தங்கியிருக்கும் பொதுப்பணி துறையின் சுற்றுலா மாளிகைக்கு சென்றனர்.

ஆய்வின்போது போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் கரூர் ஈரோடு சாலையில் முனியப்பன் கோவிலில் இருந்து கோதூர் பிரிவு சாலை வரை தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடனர்.

இரண்டாவது நாளாக வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு

இந்தநிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை 7 மணிக்கு வேலுச்சாமிபுரத்திற்கு வந்த சிபிஐ பாரோ போகஸ் நவீன கருவி மூலம் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் வழக்கில் எஸ்ஐடி குழு மற்றும் தனிநபர் குழு மற்றும் பொதுமக்கள் அளித்த பல்வேறு வாக்குமூலங்கள் அடிப்படையிலும், விடியோ ஆதாரங்களின் அடிப்படையிலும் அவற்றினை ஒப்பீடு செய்வதற்காக சிபிஐ அதிகாரிகள் விடியோ ஆதாரங்களை மிகத்துல்லியமாக ஒப்பீடு செய்யும் 3டி லேசர் ஸ்கேனர் கருவியை பயன்படுத்தி வருகிறார்கள்.

போரோ போகஸ்-நவீன ஸ்கேனா்!

சிபிஐ அதிகாரிகள் பயன்படுத்தி வரும் ‘போரோ போகஸ்’கருவி குறித்து அதிகாரிகளுடன் வந்திருந்த உதவியாளா் ஒருவா் கூறியதாவது:

‘போரோ போகஸ்’ கருவி என்பது ஒரு அதிவேக 3டி லேசா் ஸ்கேனா் கருவியாகும். இது ஒரு குறிப்பிட்ட பகுதியின் அல்லது பொருளின் துல்லியமான, விரிவான முப்பரிமாண (3டி) டிஜிட்டல் மாதிரியை உருவாக்க உதவுகிறது. இது மில்லியன் கணக்கான புள்ளிகளை விநாடிக்குச் சேகரித்து, அப்பகுதியை நிறத்துடன் துல்லியமாகப் பதிவு செய்கிறது. மேலும் இந்தக் கருவி பொதுப் பாதுகாப்பு மற்றும் தடயவியல், விபத்து நடந்த இடங்கள் அல்லது குற்றச் சம்பவ இடங்களை மிக விரைவாகவும், துல்லியமாகவும் ஆவணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும், தடயவியல் பகுப்பாய்வுக்காக விரிவான 3டி மறுசீரமைப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டது என்றாா் அவா்.

CBI officials inspect Karur Veluchamipuram for the 2nd day with modern equipment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்திரச் செவ்வானம்... ராஷ்மி கௌதம்!

ஏடிஎம் பயன்படுத்தும் முன் 2 முறை 'கேன்சல்' பட்டனை அழுத்த வேண்டுமா? உண்மை என்ன?

மென்பொருள் திறன் படிப்புகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கவிதையின் நிறம் பச்சை... சாதிகா!

எடப்பாடி பழனிசாமிதான் கோடநாடு வழக்கில் ஏ1: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT