திருநெல்வேலி: இந்தியத் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக வியாழக்கிழமை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு குற்றம் சாட்டினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு, செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி, சமூக நல்லிணக்கப் பேரவை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து, "மாபெரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை (நவ.6) உடையார்பட்டி சந்தியாகப்பர் ஆலய திடலில் நடத்தின. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு, செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நேர்மையாக இல்லை. அவர்கள் ஆள்பவர்களுக்குத் துணையாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள். பல ஆண்டுகளாக, பல தேர்தல்களில் வாக்களித்த ஒரு வாக்காளரை, 'புதிதாக வாக்காளர் படிவம் கொடுத்து உங்கள் விவரங்களைக் குறிப்பிட்டு என புதியதாக வாக்காளராக சேர்க்க வேண்டும்' என்று சொல்வதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது? இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை அவமானப்படுத்தும் செயல். இதை எதிர்த்து ஒரு வாக்காளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, "முதல்வர் குறுகிய மனப்பான்மையுடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்" என நடிகர் விஜய் விமர்சித்திருப்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, யாருடைய மனப்பான்மை குறுகியது என்பதை நாடே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. 41 பேர் இறந்த துயரச் சம்பவத்தில், ஒரு நிமிடம் கூட நிற்காமல் சென்னைக்குத் திரும்பி தன் வீட்டிலே தங்கிக்கொண்டவர் விஜய்.
தகவல் கிடைத்தது முதல் இரவு முழுவதும் தூங்காமல் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, இறந்தவர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி, உலகமே பாராட்டும் அளவுக்குச் செயல்பட்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். கொடூரமான எண்ணம் இருந்திருந்தால், அந்த 41 பேர் இறப்புக்குக் காரணமானவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். ஆனால், 'எந்தத் தலைவரும் தன் தொண்டர்களைக் கொலை செய்ய நினைக்க மாட்டார்கள்' என்று எவ்வளவு பெருந்தன்மையுடன் முதல்வர் கூறினார். இதைச் சிறுமைப்படுத்துபவர்கள் சிறுமைப்பட்டுப் போவார்கள் என்றார்.
மேலும், "முதல்வருக்கு தைரியம் இருந்தால் விஜய்யை கைது செய்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அப்படிச் செய்திருந்தால், 2026-இல் அவருக்காக ஒரு புரட்சியே வெடித்திருக்கும். முதல்வர் அரசியல் நாகரிகம் கருதி அவ்வாறு செய்யவில்லை," என்று கூறினார்.
திமுகவுக்குப் பிறகு தங்களது கட்சிதான் எனப் புதிதாகக் கட்சி தொடங்கியவர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு,, "ஆளுங்கட்சியைப் பார்த்துதான் அனைவரும் விமரிசனம் செய்வார்கள். இதற்கு முன் எத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினார்கள், அவர்களது நிலை என்ன ஆனது என்பது வரலாறு கூறும். அந்த வரலாற்றுப் பட்டியலில் 11-ஆவதாக தம்பி விஜய்யும் சேர்ந்திருக்கிறார், அவ்வளவுதான்," என்று கூறினார்.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த கேள்விக்கு, "2026 இல் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார். சாமானிய மக்கள், இளைஞர்கள், தாய்மார்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவர் திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு எந்தத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்ததில்லை. மக்களின் பணியாற்றுவதற்காக அவர் மீண்டும் வெற்றி பெறுவார்," என்று அப்பாவு நம்பிக்கையுடன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.