புதுச்சேரி: தமிழகத்தில் மின்சார பேருந்து ஊழியர்களுக்கு இணையான ஊதியம், தினப்படி வழங்கக் கோரி புதுச்சேரி மின்சார பேருந்து ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சார பேருந்துகளை கடந்த அக்.27-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இயக்கி வைத்தனர். புதுச்சேரியின் கிராமப்பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், ஊதிய நிரந்தரம், தமிழகத்தில் மின்சார பேருந்து ஊழியர்களுக்கு இணையான ஊதியம், தினப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மின்சார பேருந்து ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
75 பேர் தேர்வு
மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் தவிர, வெளியில் இருந்து தற்காலிக பணியாளர்களாக 75 ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மாதம் ரூ.21,000 ஊதியம் என கூறப்பட்ட நிலையில், பிடித்தம் போக ரூ.17,000 மட்டுமே வழங்கப்பட்டதாக ஓட்டுநர்கள் கூறினர்.
மின்சார பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கப்பட்டு 10 நாள்களே ஆன நிலையில் ஊதிய நிரந்தரம் கோரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருது புதுச்சேரி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.