முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

நவ.25,26-ல் கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் களஆய்வு!

நவ.25, 26 ஆகிய இரண்டு நாள்கள் கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் களஆய்வு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: நவ.25, 26 ஆகிய இரண்டு நாள்கள் கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார்.

நவ.25 ஆம் தேதி கோவை காந்திநகரில் செம்மொழிப் பூங்கா மற்றும் நவ.26 ஆம் தேதி ஈரோடு மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் சிலை, அரங்கத்தை திறந்து வைக்கிறார்.

கோயம்புத்தூரில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், முத்தமிழறிஞர் கலைஞர், செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 18.12.2023 அன்று கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், நவ.25 ஆம் தேதி காலை, உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கோவை செம்மொழிப் பூங்காவினை முதல்வர் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார்கள்.

கோவையில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து, அன்று மாலையில் தொழில் துறை சார்பில் நடைபெறும் “TNRise” நிகழ்ச்சியில், முதல்வர் முன்னிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

நவ.25 ஆம் தேதி கோவையில் திறந்து வைக்கப்பட உள்ள செம்மொழிப் பூங்கா.

மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் திறப்பு

இரண்டாம் நாளான 26 ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்கள்.

மாவீரன் பொல்லான் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் அத்துமீறலுக்கு எதிராகப் போர்ப்புரிந்த தீரன் சின்னமலையின் போர்ப்படையிலும், ஒற்றர் படையிலும் தளபதியாகத் திகழ்ந்தவர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையம் கிராமத்தில் பிறந்த பொல்லான், சிறுவயதிலிருந்து வாள், வில், மற்போரில் சிறந்த முறையில் பயிற்சிகள் பெற்றார். தீரன் சின்னமலை, வெள்ளையர் படையை எதிர்த்து 1801 இல் நடைபெற்ற பவானிப்போர், 1802இல் நடைபெற்ற ஓடாநிலைப் போர், 1,803 இல் நடைபெற்ற அரச்சலூர் போர் ஆகிய மூன்று போர்களிலும் பெற்ற வெற்றிகளுக்கு மூலகாரணமாகத் திகழ்ந்தவர் மாவீரன் பொல்லான். அதனால், சினம் கொண்ட ஆங்கிலேயப் படைத்தளபதி கர்னல் ஹாரிஸ் வீரர்களால், ஓடாநிலை கோட்டைக்கு அருகில் ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மாவீரன் பொல்லான் அவர்களது வீரத்தை போற்றும் வகையில் ஜெயராமபுரத்தில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டித்தருமாறு, பொல்லான் வீர வரலாறு மீட்புக் குழு பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையை ஏற்று, திராவிட மாடல் அரசு ரூ.4.90 கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் அமைத்துள்ள அவரது முழு உருவச்சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 26.11.2025 காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துதல் தொடர்ச்சியாக, ஓடாநிலையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

ஈரோடு மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதனைத் தொடர்ந்து, ஈரோடு, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.605 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.

நவ.26 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் திறந்து வைக்கப்படவுள்ள மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம்.

பால்வளத் தந்தை சி.கு.பரமசிவன் திருவுருவச் சிலை திறப்பு

20.12.2024 அன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், “சின்னியம்பாளையத்தில் பிறந்து நாட்டு விடுதலைக்காக பாடுபட்டதோடு, தன்னுடைய அயலாத முயற்சிகளால் பால் உற்பத்திகளைப் பெருக்கி, தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட பால்வளத் தந்தை சி.கு.பரமசிவம் திருவுருவச் சிலை ஈரோடு பால்பண்ணையில் நிறுவப்படும்” என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள்.

கொங்கு மண்டலத்தின் பெருமையாகத் திகழ்ந்த சி.கு.பரமசிவன் "பசுமை நிலம், வெண்மைப் பால்" என்ற கனவைக் கொண்டு நூற்றுக்கணக்கான பசுமாடு வளர்ப்பாளர்களை ஒன்றிணைத்து, தமிழ்நாட்டிற்குப் புதிய பொருளாதாரக் களத்தை உருவாக்கினார். விவசாயக் குடும்பங்களின் வருவாயை உயர்த்தவும், பால் விநியோக முறையை நவீனப்படுத்தவும், பால்வளத் துறையைத் தொழில்மயமாக்கவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்.

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், கூட்டுறவு பால் சங்கங்கள், பால் செயலாக்கக் கட்டமைப்புகள்- அனைத்தும் அவர் விதைத்த விதையின் செழிப்பான விளைவுகளாகும். அதனால் அவர் பால்வளத் தந்தை என அழைக்கப்படுகிறார்.

அத்தகைய பெரும் ஆளுமைக்கு நன்றி செலுத்தும் வண்ணம் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில், ரூ.50 இலட்சம் செலவில் பால்வளத் தந்தை சி.கு. பரமசிவன் அவர்களின் திருவுருவச்சிலையினை நிறுவி 26 ஆம் தேதி மாலை 5 மணியளவில் திறந்து வைக்கிறார்.

இவ்விழாவில், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

Nov.25,26 CM Function-Kovai And Erode

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை!

வியத்நாம் வெள்ளம்! பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு!

தெற்கு அந்தமான் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

மழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்! நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை! | Thoothukudi

ஏசி பெட்டியில் ‘டீ கெட்டிலில்’ நூடுல்ஸ் சமைத்த பெண்.! சர்ச்சை விடியோவால் மத்திய ரயில்வே காட்டம்!!

SCROLL FOR NEXT