அரக்கோணம்: டிட்வா புயல் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் வேண்டுகோளை அடுத்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
ஒவ்வொரு தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கும் 30 பேர் வீதம் மொத்தம் எட்டு குழுக்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
புதுச்சேரிக்கு இரண்டு குழுக்கள் (60 பேர்), தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களைக் கண்டுபிடித்து காப்பாற்ற உதவும் வகையில் மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் ராணி, மிக்கி, லைக்கா மற்றும் ராம்போ ஆகிய நான்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நாய்கள் பேரிடர்களின் போது இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களைக் கண்டுபிடித்து காப்பாற்றுவதற்கு மீட்புக் குழுவினருக்கு உதவுகின்றன.
இதற்கிடையே, கடந்த 6 மணி நேரத்தில் 7 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிட்வா புயல், தற்போது புதுவையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 440 கி.மீ.தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
பலத்த காற்று மற்றும் மிக அதிக மழை பெய்யும் சாத்தியம் கொண்ட இந்த புயல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) அதிகாலை வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதையொட்டிய தெற்கு ஆந்திரம் கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலில் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.