2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக தலைமையிலான மக்களாட்சியை நிறுவுவார்கள். இது உறுதி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி கே. பழனிசாமி, தருமபுரி பாப்பிரெட்டிபட்டி தொகுதி மக்களின் எழுச்சிமிகு வரவேற்பிற்கு இடையே பிரசார வாகனத்தில் இருந்தவாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது, பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபுறம், முதலீட்டை ஈர்க்கிறேன் என்ற பெயரில் வெளிநாட்டுப் பயணம் செல்கிறார். இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததா? என்றால், இல்லை என்பதே மக்களின் விண்ணைப் பிளக்கும் பதில்.
இவர் இப்படி என்றால், இவரது மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், கரூர் சம்பவத்தின் போது கூட, சம்பிரதாய போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு உல்லாசச் சுற்றுலா சென்றுவிட்டார்.
மக்கள் மீது துளியும் அக்கறை இல்லாத இவர்கள் ஆட்சி செய்தால், உருப்படுமா?
இப்படிப்பட்ட மக்கள் விரோத திமுக குடும்ப ஆட்சியாளர்களை விரட்டி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக தலைமையிலான மக்களாட்சியை நிறுவுவார்கள். இது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்து பேசினார்.
எதிர்ப்பு உணர்வோடு மக்கள்
பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை மறந்த திமுக ஆட்சி மீது தருமபுரி தொகுதி மக்கள், மிகுந்த எதிர்ப்பு உணர்வோடு உள்ளனர்.
பாதுகாப்பை வழங்கத் தவறிய திமுக அரசு
கரூர் சம்பவம் நம் தேசம் முழுவதையும் உலுக்கியுள்ளது. அடிப்படை பாதுகாப்பை கூட வழங்கத் தவறிய திமுக அரசுக்கு இது மிகப்பெரிய தலைகுனிவு.
முதலமைச்சர் ஆளே இல்லாத இடத்தில் சென்றால் கூட கொடுக்கும் பாதுகாப்பு, பொதுமக்கள் அதிகம் கூடும் கூட்டங்களுக்கு ஏன் கொடுப்பது இல்லை?
அரசு உயர் அதிகாரிகளை வைத்து கரூர் துயரம் பற்றி செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். இது ஒரு நபர் ஆணைய விசாரணையை தவறாக வழிநடத்துகின்ற மற்றும் அவமதிக்கும் செயல்.
செந்தில் பாலாஜிக்கு ஏன் இந்த பயம்?
செய்தியாளர் சந்திப்பு நடத்தும் செந்தில் பாலாஜி பேச்சில் பயம் தெரிகிறது. ஏன் இந்த பயம்? பதற்றம்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?
இவ்வளவு நடந்தும், ஸ்டாலின் திருந்திய பாடில்லை என்பதே அவரது அரசின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.
2026-இல் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, தவறிழைத்தோருக்கு உரிய பாடம் புகட்டப்படும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.