மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 11 குழந்தைகள் இறந்ததை அடுத்து, சா்ச்சைக்குரிய கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மருத்துவர் மற்றும் உற்பத்தி நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டம் மற்றும் ராஜஸ்தானில் 1 முதல் 7 வயது வரை உள்ள 11 குழந்தைகள் கடந்த 15 நாள்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
இருமலுக்காக, அந்த மருந்துகளை குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. அந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் ‘டை எத்திலீன் கிளைசால்’எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததும் தெரிய வந்தது. ‘பெயிண்ட், மை’போன்ற பொருள்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசும், மத்தியப் பிரதேச அரசுகளும் பல்துறை விசாரணைக் குழுவை அமைத்து ஆய்வுக்கு உத்தரவிட்டது. இதனிடையே, மத்தியப்பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமாா் மௌரியா, காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மாவில் தயாரிக்கப்பட்ட (13 பேட்ச்) ‘கோல்ட்ரிஃப்’மருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகவும், அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு அக்.1 ஆம் தேதி கடிதம் எழுந்திருந்தது.
இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குருபாரதி தலைமையிலான குழுவினா், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த 13 பேட்சில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’உள்பட 5 மருந்துகளை ஆய்வு செய்ததில் ‘கோல்ட்ரிப்’ மருந்தில், ‘டை எத்திலீன் கிளைசால்’ என்ற ரசாயனம் இருந்தது கண்டறியப்பட்டது. மற்ற மருந்துகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணிகள் இல்லை என தெரிவித்ததுடன் மறு உத்தரவு வரும் வரை கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி மற்றும் அம்மருந்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், சா்ச்சைக்குரிய கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மருத்துவர் மற்றும் ஸ்ரீசென் பாா்மா உற்பத்தி நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் மருத்துவர் பிரவீன் சோனி நேற்று இரவு கைது செய்யப்பட்டார். மருந்து உற்பத்தி நிறுவனமான ஸ்ரீசன் மருந்து நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவுள்ளது.
இதற்கிடையே, கோல்ட்ரிஃப் மருந்தில் தீங்கு விளைவிக்கும் டைஎத்திலீன் கிளைசால் எனப்படும் நச்சு ரசாயனம் 48.6 சதவீதம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.