பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் டி.டி.கே சாலை - வீனஸ் காலனியில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் விரிவாக்கப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் டி.டி.கே. சாலை - வீனஸ் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கழிவுநீர் விரிவாக்கப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஆழ்வார்பேட்டை – டி.டி.கே. சாலையில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள்
தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-118, டி.டி.கே சாலை ஆழ்வார்பேட்டையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில், சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி, 200 மீட்டர் நீளத்திற்கு, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
வீனஸ் காலனி மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு
வீனஸ் காலனி 1வது தெரு. 2வது தெரு, சீமான் சீனிவாசன் தெரு, வரதராஜபுரம் பிரதான சாலை, கஸ்தூரி எஸ்டேட் 1வது தெரு, சேஷாத்திரி தெரு மற்றும் முரேஷ் கேட் சாலை ஆகிய தெருக்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்படுகிறது.
மேற்குறிப்பிட்ட தெருக்களில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கா வண்ணம், ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை குறுக்கு தெரு, இளங்கோ சாலை, போயஸ் ரோடு, வெங்கடரத்தினம் சாலை, ராஜகிருஷ்ணா ரோடு, நல்லான் போயஸ் ரோடு, வரதராஜபுரம் பிரதான சாலை, ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் ரோடு மற்றும் டிடிகே சாலை ஆகிய பத்து தெருக்களில் மழை நீர் வடிகால்கள் சுமார் 2.16 கிமீ நீளத்திற்கு ரூ.8.21 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது எதிர்வரும் பருவமழையையொட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், பணிகளை மிக விரைந்து முடித்திட வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேற்கண்ட மழை நீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேங்கும் மழை நீரை எல்டம்ஸ் சாலை, சிபி ராமசாமி சாலை, லஸ் சர்ச் சாலை மற்றும் சி.ஐ.டி காலனி ஆகிய நான்கு வழியாக வெளியேற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் மரு. எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே. சிற்றரசு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.