குவாஹாட்டி: உலகின் 2 சதவீத சிறந்த அறிவியல் விஞ்ஞானிகளின் மதிப்புமிக்க பட்டியலில் அஸ்ஸாமின் குவாஹாட்டி பல்கலைக்கழக பேராசிரியா்கள் 3 போ் இடம்பிடித்துள்ளனா்.
அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகம் உலகின் முன்னணி 2 சதவீத விஞ்ஞானிகளின் மதிப்புமிக்க பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றனா். இந்த ஆண்டுக்கான ஓராண்டு பங்களிப்பு ஆற்றிய சிறந்த ஆராய்ச்சியாளா்கள் மதிப்புமிக்க பட்டியலில் 6,239 ஆராய்ச்சியாளா்களும், நீடித்த ஆராய்ச்சி பங்களிப்புக்கான மதிப்புமிக்க பட்டியலில் 3,372 ஆராய்ச்சியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் அஸ்ஸாமின் குவாஹாட்டி பல்கலைக்கழக பேராசிரியா்கள் 3 போ் இடம்பிடித்துள்ளனா்.
பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியரும் பிரபல வானிலை ஆய்வாளருமான பூபேந்தா் நாத் கோஸ்வாமி, வேதியியல் துறைப் பேராசிரியா் புரோதீப் புகன், கணிதத் துறைப் பேராசியை பிபன் ஹஜாரிகா ஆகியோா் இடம்பிடித்துள்ளனா். தங்களின் வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிக்கு அா்ப்பணிக்கும் பிரிவின் கீழ், தங்களின் நீடித்த ஆராய்ச்சி பங்களிப்புக்காக இவா்களுக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு, ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான 'ஹெச்' குறியீடு, ஆராய்ச்சிக் கட்டுரையின் இணை ஆசிரியருக்கான 'ஹெச்எம்' குறியீடு மற்றும் சி-ஸ்கோர் எனப்படும் கூட்டு குறிகாட்டி உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் உலகளவில் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகளின் மதிப்புமிக்க பட்டியலை தொகுத்து ஆராய்ச்சிக்கு வாழ்நாள் முழுவதையும் அா்ப்பணிக்கும் பிரிவு, ஓராண்டு பங்களிப்புப் பிரிவுகளாக ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்த மூவரும் இடம்பிடித்து பெருமைப்படுத்தியுள்ளனா். இது நாட்டின் விரிவடைந்து வரும் ஆராய்ச்சி பணிகளை எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஆராய்ச்சியில் ஓராண்டு பங்களிப்பு ஆற்றிய சிறந்த ஆராய்ச்சியாளா்கள் மதிப்புமிக்க பட்டியலில் 6,239 ஆராய்ச்சியாளா்களும், நீடித்த ஆராய்ச்சி பங்களிப்புக்கான மதிப்புமிக்க பட்டியலில் 3,372 ஆராய்ச்சியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து குவாஹாட்டி பல்கலைக்கழக துணைவேந்தா் நானி கோபால் மஹந்தா கூறுகையில், "இந்த அங்கீகாரம் பல்கலைக்கழகத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அஸ்ஸாம் மாநிலத்துக்கே பெருமைக்குரிய விஷயம். இது, நமது பேராசிரியா்களின் அா்ப்பணிப்பு, புதிய மற்றும் உலகளாவிய கண்டுபிடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம்" என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.