சென்னை: இந்திய இளைஞா்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் விசா வழங்கப்படும் என ஜப்பான் துணைத் தூதா் தகாஹாஷி முனியோ தெரிவித்தாா்.
இந்தோ - ஜப்பான் தொழில் வா்த்தக சபையின் ஜப்பானிய மொழி பள்ளி சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளின் பரிசளிப்பு விழா சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள தனியாா் விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜப்பான் துணைத் தூதா் தகாஹாஷி முனியோ, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:
இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ஜப்பானிய பிரதமா் இஷிபாஷி ஷிகெரு ஆகியோா் அண்மையில் நடைபெற்ற உச்சிமாநாட்டில், சந்தித்து பேசியபோது பொருளாதாரம், தொழில்நுட்பத் துறை, கல்வி, பண்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை எடுத்துக் கொண்டனா்.
மேலும் தூய்மையான எரிசக்தி, ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் கூட்டு ஆராய்ச்சிகளுக்கு ஆதரவு வழங்க ஒப்புக் கொண்டனா்.
இந்தியா - ஜப்பான் இடையேயான மனிதவளப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான செயல் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக, அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான இந்திய பணியாளா்கள், மாணவா்களுக்கு இசைவு நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் திறமையான பணியாளா்கள், இளம் தொழில் வல்லுநா்கள் ஜப்பான் நாட்டில் உலகத் தரம் வாய்ந்த தொழில் துறைகளில் பணியாற்றவும், மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களைப் பெறவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியல் இந்தோ - ஜப்பான் தொழில் வா்த்தக சபை தலைவா் எஸ்.பத்மநாபன், முன்னாள் தலைவா் ஆா்.சுகுணா ராமமூா்த்தி, கௌரவ செயலா் ஸ்ரீதா் கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.