பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள ஜன் சுராஜ் கட்சியின் (ஜேஎஸ்பி) நிறுவனத் தலைவர் பிரசாந்த் கிஷோர், இந்தத் தேர்தலில் நிதிஷ் குமாரின் கட்சிக்கு 25 இடங்கள் கூட கிடைக்காது என்று பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் துணை முதல்வராகவும் இருந்த தேஜஸ்வி பிரசாத் யாதவுக்கு எதிராக போட்டியிடுவேன் என ஏற்கனவே கூறியிந்த நிலையில் தற்போது போட்டியிடவில்லை என கூறியுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நவ. 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் வாக்குப் பதிவும், 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.
இதையடுத்து பாஜக-ஜக்கிய ஜனாதளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தொகுதி பங்கீடு 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 243 தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பாஜக செவ்வாய்க்கிழமை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 71 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் வெளியிட்டது.
பிகாரில் ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கும் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன.
இதனிடையே, ஓவைசியும், பிரசாந்த் கிஷோரும் தனித்தனியே தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் கணிசமான இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிகார் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை உறுதி செய்துள்ள பிரசாந்த் கிசோர், செவ்வாய்க்கிழமை இரவு ரகோபூர் தொகுதியில் ஜேஎஸ்பி வேட்பாளராக சஞ்சல் சிங்கை அறிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக கட்சி பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்தார். இந்த முடிவு எனது அரசியல் பயணத்தின் நன்மை கருதி எடுக்கப்பட்ட முடிவு. தேர்தல் உத்தி மற்றும் கட்சியின் ஆதரவு தளத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த இருப்பதாகவும், தான் தேர்தலில் போட்டியிட்டால், எனது செயல்பாடுகள் ஒரு தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்பதாலும், மேலும் கட்சியின் மிக முக்கியமான முகமாக இருப்பதால் பிரசாரத்தையும் பாதிக்கும் என்பதால் கட்சியின் பரந்த நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், தனது கட்சியின் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து கிஷோர் கூறுகையில், தனது கட்சி மகத்தான வெற்றியைப் பெறும் அல்லது படுதோல்வி அடையும். "10 இடங்களுக்கு குறைவான இடங்களோ அல்லது 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இடையில் எதுவும் நடக்க வாய்ப்பில்லை, முடிவுகள் எதுவாக இருந்தாலும் தனது கட்சியின் மூலம் மக்கள் நலனுக்கான பணிகளை தொடர்ந்து செய்வேன்." என்று அவர் கூறினார்.
கிஷோர் தேர்தலில் போட்டியிட்டால், தனது சொந்தத் தொகுதியான கர்கஹாரிலிருந்து அல்லது ஆர்ஜேடி கோட்டையான ரகோபூரிலிருந்து போட்டியிடுவேன் என்று முன்னதாகவே கூறியிருந்தார். இருப்பினும், நடிகர் ரித்தேஷ் பாண்டேவை கர்கஹார் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.
தேஜஸ்வி யாதவிற்கு எதிராக போட்டியிடுவேன். அப்போது, 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்கொண்ட அதே நிலையை தேஜஸ்வி சந்திப்பார் என்றும், ரகோபூரில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தேஜஸ்வி இரண்டு இடங்களில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே கிஷோர் கூறியிந்த நிலையில் தற்போது போட்டியிடவில்லை என கூறியுள்ளார்.
பிகார் பேரவைத் தேர்தலில் ஆளும் என்டிஏ ஒரு குறிப்பிட்ட தோல்வியை சந்திக்கும், மேலும் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு 25 இடங்களில் வெற்றி பெறுவதற்கே போராடும் என்றும் கூறினார். " நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகமாட்டார்" என்று அவர் கூறினார்.
தேஜஷ்வி மூன்றாவது முறையாக ரகோபூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.