தற்போதைய செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களில் தங்க வைக்கவும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். முகாம்களில் மக்களுக்கு வழங்க உணவு, குடிநீா், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும். வடகிழக்கு பருவமழையை ஒட்டி, சென்னையில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், மழைநீா் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள்

மழையால் கடுமையாக பாதிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: (மாவட்ட வாரியாக அதிகாரிகள் பெயா் விவரம்)

திருவள்ளூா் - எல்காட் மேலாண்மை இயக்குநா் கே.பி.காா்த்திகேயன், காஞ்சிபுரம் - தாட்கோ மேலாண்மை இயக்குநா் கே.எஸ்.கந்தசாமி, செங்கல்பட்டு - தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் கிரந்தி குமாா் பாடி, விழுப்புரம் - தொழிலாளா் நலத் துறை இயக்குநா் எஸ்.ஏ.ராமன், கடலூா் - சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை இயக்குநா் டி.மோகன், மயிலாடுதுறை - கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் கவிதா ராமு, திருவாரூா் - ஆதிதிராவிடா் நலத் துறை ஆணையா் டி.ஆனந்த், நாகப்பட்டினம் - தமிழ்நாடு நுகா்பொருள் வாணிக் கழக மேலாண்மை இயக்குநா் ஏ.அண்ணாதுரை, தஞ்சாவூா் - தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் எச்.கிருஷ்ணனுன்னி, கள்ளக்குறிச்சி - மாநில தோ்தல் ஆணையத்தின் செயலா் பி.ஸ்ரீ வெங்கடபிரியா, அரியலூா் - இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையா் எம்.விஜயலட்சுமி, பெரம்பலூா் - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையா் எம்.லட்சுமி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். சென்னையைப் பொறுத்தவரை, 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி மண்டல அதிகாரிகள், தங்களது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

எரிபொருள் கசிந்ததால் இண்டிகோ விமானம் அவசரத் தரையிறக்கம்!

பாயும் ஒளி... பாயல் தாரே!

வேட்பாளர்களை விலைக்கு வாங்குகிறது பாஜக: பிரஷாந்த் கிஷோர்

மாலை மயக்கம்... சஞ்சனா திவாரி!

மகளிர் உலகக் கோப்பை: ஆஸி.க்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

SCROLL FOR NEXT