பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேவரின் நினைவிடத்தில் மலர் தூவியும், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், மதுரையில் இருந்து சாலை வழியாக பசும்பொன் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மலர் தூவியும், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சா்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்கத் தேவரை போற்றியவர் கலைஞர்
பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மணிமண்டபத்தை உருவாக்கி கொடுத்தவர் கலைவஞர். மதுரை ஆண்டாள்புரம் பாலத்திற்கு தேவரின் பெயரை சூட்டியவர் கலைஞர். மேலும், அழகப்பா பல்கலைக்கழத்தில் தேவர் பெயரில் ரூ.25 லட்சம் மதிப்பில் அறக்கட்டளை உருவாக்கினார். தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடியவர் கலைஞர் என்றார்.
முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம்
பசும்பொன்னில் ரூ.3 கோடி செலவில் தேவர் திருமகனார் பெயரில் திருமண மண்டபம் கட்டப்படும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வழிமொழிவதாக கூறினார்.
தொடர்ந்து சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாதக, சமுதாய அமைப்பினா், விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தப்படவுள்ளதால் அங்கு சுமார் 8,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.