மதுரையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ள நிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள சு.வெங்கடேசன் எம்.பி., மதுரைக்கு வரும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை நபர் சார்ந்து இருப்பதைவிட நகரம் சார்ந்து இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மதுரை உள்பட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. முன்னதாக, பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மதுரையில் 95.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. பிற்பகல் 3.30 மணிக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி முதல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மதுரையில் தல்லாகுளம், கோ. புதூா், மூன்றுமாவடி, கடச்சனேந்தல், நரசிங்கம், ஒத்தக்கடை, மாட்டுத்தாவணி, அண்ணாநகா், கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியாா் பேருந்து நிலையம், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் மாலை 5.30 மணி வரை தொடா்ந்து பலத்த மழை பெய்தது. பிறகு, மாலை 6.30 மணி வரை மிதமான மழை பெய்தது.
இதேபோல, பசுமலை, திருப்பரங்குன்றம், ஹாா்விபட்டி, திருநகா், தனக்கன்குளம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மாலை 4.45 மணி முதல் மாலை 6 மணி வரை பலத்த மழை பெய்தது.
மதுரையில் பல்வேறு இடங்களில் மழை நீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. ரயில் நிலையம், சிம்மக்கல், தல்லாகுளம், அண்ணா நகா், வைகையாற்றின் தென்கரை சாலை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமாா் ஒன்றரை அடி முதல் 3 அடி உயரம் வரை மழை நீா் சாலைகளில் தேங்கி, குளம் போலக் காட்சியளித்தது. மேலும் இரு சக்கர வாகனங்கள் ஒரு சில பகுதிகளில் மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனா்.
மதுரை மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் மாலை 5.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்துச் சாலைகளிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இரு சக்கர வாகனம் அரை கி.மீ. தொலைவைக் கடக்க 45 நிமிஷத்துக்கும் அதிகமானது.
இதனிடையே, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போலீஸாா் தீவிர கவனம் செலுத்தாததால், நெருக்கடி இன்னும் அதிகரித்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலா்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாகினா். ஒரு சில அவசர ஊா்திகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.
இந்நிலையில், மதுரையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி., மதுரைக்கு வரும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை நபர் சார்ந்து இருப்பதைவிட நகரம் சார்ந்து இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
மதுரையில் புதன்கிழமை அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக சென்னை மழை நீர் வடிகாலை மறுசீரமைக்கும் வேலை அதிக நிதி ஒதுக்கீடு செய்து திட்டமிடல் மற்றும் கண்காணிப்புடன் கூடிய பணிகள் நடைபெற்றுள்ளன. அதற்கான நல்ல விளைவுகளும் உருவாக்கியுள்ளது.
ஆனால் மதுரையில் அப்படிச் சொல்வதற்கில்லை. நீர் போக்கு வழித்தடங்களை கண்டறிந்து அவற்றின் இடையூறுகளை சரி செய்து, நிலத்துக்கடியில் குழாய் பதித்து, லிப்ட் ஸ்டேஷன்கள் உருவாக்கி மழைநீரை கையாளத் திறன்கொண்ட நகரமைப்பை உருவாக்க வேண்டும். மதுரைக்கு வரும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை நபர் சார்ந்து இருப்பதைவிட நகரம் சார்ந்து இருக்க வேண்டும்.
எல்லாத் துறைகளையும் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டியது அவசரத்தேவையாக உள்ளது. அடுத்துத் தொடங்கவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான எச்சரிக்கையாக இதை எடுத்துக்கொண்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மதுரை வைகையாற்றின் தென்கரை சாலையில் புதன்கிழமை தேங்கிய மழை நீரில் சென்ற வாகனங்கள்.
MP Su. Venkatesan has stated that rainwater has accumulated in various places in Madurai, causing inconvenience to the public.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.