புதுடில்லி: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அரசாங்கத்தின் முயற்சியால் தனிப்பட்ட ஆதாயம் கிடைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேர்மையாக சம்பாதிப்பது எப்படி என்பது எனக்குத் தெரியும் என்றும், மாதத்திற்கு ரூ.200 கோடி சம்பாதிக்கும் அளவுக்கு தனக்கு அறிவுத்திறன் இருப்பதாக கூறினார். மேலும் தனக்கு பணப் பற்றாக்குறை இல்லை, எனக்கு எனது வருமானம் போதுமானது என்று கூறினார்.
பெட்ரோலில் 20% எத்தனாலை கலக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தாலும், அது உண்மைக்கு புறம்பானது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
அரசாங்கம் எத்தனாலை ஒரு தூய்மையான மற்றும் மலிவான மாற்று எரிபொருளாக ஊக்குவிக்கும் அதே வேளையில், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, வாகனப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் தேர்வு ஆகியவற்றில் அதன் தாக்கம் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
இதனிடையே, நிதின் கட்கரி மகன்கள் எத்தனால் தொடர்பான வியாபாரம் செய்து வருவதால் அவர் எத்தனாலை அதிகயளவில் எரிபொருளில் சேர்க்க வேண்டும் என்று விளம்பரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில், நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் குற்றச்சாட்டை நிராகரித்த நிதின் கட்கரி, தனது மகன்களுக்கு சட்டப்படி முறையாக தொழில் செய்ய நான் வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்குறேன். ஆனால் நான் மோசடியில் ஈடுபடுவதில்லை.
சமீபத்தில், என் மகன் ஈரானில் இருந்து 800 கண்டெய்னரில் ஆப்பிள்களை இறக்குமதி செய்ததாகவும், மேலும் 1,000 கண்டெய்னரில் வாழைப்பழங்களை இந்தியாவிலிருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்தார். எனது மகன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியிலும் ஈடுபட்டு வருகிறார். எனக்கு சொந்தமாக ஒரு சர்க்கரை ஆலை உள்ளது. அதோடு ஒரு சாராய ஆலை மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையமும் உள்ளது. நான் தனிப்பட்ட லாபத்திற்காக விவசாயத்தில் பரிசோதனை செய்வதில்லை என்று கட்கரி கூறினார்.
உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன். நாக்பூர் முழுவதும் காய்கறி விற்பனையாளர்களுக்கு பழ வணிக வளாகங்களை எவ்வாறு நிறுவ வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி உள்ளேன். எ
என்னை பொறுத்தவரை, இதுபோன்ற முயற்சிகள் முக்கிய நகரங்களுக்கு இடையே நேரடி விற்பனை நிலையங்களை செயல்படுத்துவதன் மூலம் வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றன. நான் இதையெல்லாம் என் சொந்த வருமானத்திற்காகச் செய்யவில்லை, இல்லையெனில் வேறு எதற்காக என்று நீங்கள் நினைக்கலாம். எனக்கு எனது வருமானம் போதுமானது. நேர்மையாக சம்பாதிப்பது எப்படி என்பது எனக்குத் தெரியும். எனக்கு மாதத்திற்கு ரூ.200 கோடி சம்பாதிக்கும் அளவுக்கு அறிவுத்திறன் இருக்கிறது. எனக்கு பணப் பற்றாக்குறை இல்லை. எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சியால் இயக்கப்படுகின்றன என்று நிதின் கட்கரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.