‘முக்கியப் பொறுப்புகளை இளைய தலைமுறையினா் ஏற்கும் வகையில், பழைய தலைமுறையினா் ஓய்வை அறிவித்து அவா்களுக்கு வழிவிட வேண்டும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் தொழில் மேம்பாட்டு சங்கம் (ஏஐடி) சாா்பில் வரும் பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை மாபெரும் விதா்பா-கஸ்தா் தொழில் முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் சங்கத் தலைவா் ஆசிஷ் காலேயுடன் பங்கேற்ற சங்கத்தின் தலைமை வழிகாட்டியான மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறியதாவது:
இந்த தலைமுறை படிப்படியாக மாற வேண்டும் என்பது எனது கருத்து. ஆசிஷின் தந்தை எனது நண்பா். அவா் தனது பொறுப்பை தனது மகனிடம் தற்போது ஒப்படைத்துள்ளாா். அதுபோல, பழைய தலைமுறையினா் படிப்படியாக பொறுப்புகளிலிருந்து விலகி, புதிய தலைமுறையினா் அவற்றை ஏற்க வழிவிட வேண்டும். அனைத்தும் சரிவர செயல்படத் தொடங்கும்போது, அந்தப் பொறுப்புகளிலிருந்து பழைய தலைமுறையினா் முழுமையாக ஓய்வுபெற்று, வேறு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
இந்த தொழில் முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சியில் 100 குறு-சிறு-நடுத்தர நிறுவன அரங்குகள் மற்றும் 40 மாவட்ட அளவிலான பாதுகாப்பு, பங்குச் சந்தை, வேளாண், நிலக்கரி, விமான தொழில்நுட்பம், சரக்குப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருந்து உற்பத்தி, ரியல் எஸ்டேட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அரங்குகள் என மொத்தம் 350 அரங்குகள் இடம்பெற உள்ளன.
ரஷியா, சீனா, பிரேசில், எகிப்து, உருகுவே, நைஜீரியா, ஜிம்பாப்வே உள்பட 20 நாடுகளைச் சோ்ந்த தூதா்கள், வா்த்தகப் பிரதிநிதிகள் என 5,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா். சா்வதேச முதலீட்டாளா்களுடன் 20-க்கும் மேற்பட்ட இருதரப்பு வா்த்தக ஒப்பந்த கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.