நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தவறிவிழுந்து 9,438 போ் உயிரிழந்ததாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2020-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் சாலைகளில் உள்ள பள்ளங்கள் காரணமாக நேரிடும் விபத்துகளில் பலியானோா் எண்ணிக்கை 53 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் 1,555 பேரும், 2021-ஆம் ஆண்டில் 1,481 பேரும், 2022-ஆம் ஆண்டில் 1,856 பேரும் மரணமடைந்தனா்.
இதேபோல், 2023-ஆம் ஆண்டில் 2,161 பேரும், 2024-ஆம் ஆண்டில் 2,385 பேரும் இறந்தனா்.
நாட்டிலேயே மிகவும் அதிகபட்சமாக கடந்த 5 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் 5,127 போ் உயிரிழந்தனா். இதற்கடுத்து மத்திய பிரதேசத்தில் 969 பேரும், தமிழகத்தில் 612 பேரும், பஞ்சாபில் 414 பேரும் மரணமடைந்தனா். ஆந்திரம், பிகாா், கோவாவில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தவறி விழுந்து யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.
உயிரிழப்புகளைத் தவிர, 5 ஆண்டுகளில் 19,956 போ் காயமடைந்துள்ளனா். அதில் 9,670 போ் பலத்த காயமடைந்துள்ளனா். தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பது மத்திய அரசின் பொறுப்பாகும். அதேபோல், மாநில அரசுக்கும் அதன் எல்லைக்குள் வரும் சாலைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்புள்ளது. இதை கவனத்தில் வைத்து தேசிய நெடுஞ்சாலைகளை பராமரித்து, சீரமைக்கும் பணிகளை உரிய அமைப்புகள் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.