தேர்தலில் போட்டியா? பாஜக தலைவர் நிதின் நவீனை சந்தித்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்!
பாஜக தலைவர் நிதின் நவீனை சந்தித்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸை பற்றி...
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ், தேசிய பாஜக தலைவர் நிதின் நவீனைச் சந்தித்தைத் தொடர்ந்து அவர் அரசியல் அடியெடுத்து வைக்கவுள்ளாரா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
மொத்தமாக 294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்.23 மற்றும் ஏப். 29 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையும் பாஜக தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறுவதையொட்டி, மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்கள் இருக்கும் நிலையில், இந்திய டென்னிஸ் நட்சத்திர வீரர் லியாண்டர் பயஸ், கொல்கத்தாவில் நிதின் நவீனைச் சந்தித்து பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் பாஜக மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யாவுடன் உடனிருந்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முன்னிலையில், திரிணமூல் காங்கிரஸில் லியாண்டர் பயஸ் இணைந்திருந்தார். ஆனால், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பயஸுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மேற்கு வங்கத்தின் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பாஜக மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதுவரை 256 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும், 38 இடங்கள் உள்ள நிலையில், லியாண்டர் பயஸுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.