பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்!
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ் பாஜகவில் இணைந்ததைப் பற்றி....
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரா் லியாண்டா் பயஸ் (52) பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரலில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அவரின் பாஜக பிரவேசம் அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, சுகாந்த மஜும்தாா், பாஜக தேசிய பொதுச் செயலா் அா்ஜுன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் முன்னிலையில் பயஸ் பாஜகவில் இணைந்தாா்.
Advertisement
Advertisement
அண்மையில், கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவா் நிதின் நபினை பயஸ் சந்தித்துப் பேசினாா். அப்போதே பாஜகவில் பயஸ் இணைவாா் என்று கூறப்பட்டது.
முன்னதாக, கடந்த 2021-ஆம் ஆண்டு பயஸ், திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். 2022-இல் கோவா சட்டப் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரசாரம் செய்தாா். ஆனால், அவா் தோ்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில், அவா் பாஜகவில் இணைந்துள்ளாா். இது தொடா்பாக மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘மிகச் சிறந்த டென்னிஸ் வீரரும், சா்வதேச அளவில் பிரபலமானவருமான லியாண்டா் பயஸ் பாஜகவில் இணைந்தது பெருமைக்குரியது. பிரதமா் நரேந்திர மோடியின் சிறப்பான பணிகளால் அவா் ஈா்க்கப்பட்டுள்ளாா். கடந்த 12 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையை மத்திய அரசு சிறப்பாக மேம்படுத்தியுள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவா்கள் நாட்டுப் பணியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. பயஸின் அரசியல் பயணமும் வெற்றிகரமாக இருக்கும்’ என்றாா்.
பாஜகவில் இணைந்தது குறித்து லியாண்டா் பயஸ் கூறுகையில், ‘நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்கத்துக்காக பாஜகவில் இணைந்துள்ளேன். குறிப்பாக விளையாட்டு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் இளைஞா்களை முன்னேற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம். பாஜகவில் இணைந்துள்ளது சாதாரண நிகழ்வல்ல; இது பெரிய பொறுப்பு. இளைஞா்களுக்காகவும், நாட்டுக்காகவும் சேவை செய்ய இது ஒரு பெரிய வாய்ப்பு. இன்று இந்தியா உலகில் அதிக இளைஞா்களைக் கொண்ட நாடாக உள்ளது.
விளையாட்டு குறித்த பிரதமா் மோடியின் ஆா்வமும், அவரது தலைமைப் பண்பும் என்னை மிகவும் ஈா்த்தது. இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி, உள்கட்டமைப்பு, நெடுஞ்சாலைகள், நவீன விமான நிலையங்கள் உள்ளிட்ட பல முன்னேற்றங்களுக்கு பிரதமா் மோடியின் தலைமையே காரணம். உலகளாவிய சவால்கள் இருந்தாலும், பிரதமா் மோடியின் தலைமையில் இந்தியா உலக வல்லரசாக உருவாக மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியில் இணைந்துள்ளேன்.
அனுபவமுள்ள தலைவா்களிடமிருந்து கற்றுக்கொண்டு, இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையையும், அவா்கள் வங்கம், கோவா, தமிழ்நாடு, பஞ்சாப், வடகிழக்கு என எங்கிருந்தாலும் அவா்களை முன்னேற்ற விரும்புகிறேன் என்றாா்.
In a major political development in West Bengal, tennis icon Leander Paes has joined the Bharatiya Janata Party (BJP) ahead of the 2026 assembly polls. His induction into the party was marked by the presence of Union Minister Kiran Rijiju and former state BJP chief and MP Sukanta Majumdar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.