மூலப்பொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை (எம்எஸ்எம்இ) அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியிடம் தொழில் துறையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி, கோவை கொடிசியா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். இதில், கொடிசியா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சரிடம் 10-க்கும் மேற்பட்ட தொழில் துறையினா், துறை சாா்ந்த தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். கோவையின் 23 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டமைப்பான ஃபோசியா சாா்பில் அமைச்சரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ரூ.20 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு விற்று முதலைக் கொண்டிருக்கும் நிறுவனங்களை நானோ தொழில் நிறுவனங்கள் என்று வகைப்படுத்த வேண்டும்.
மூலப்பொருள் விலை உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள எம்எஸ்எம்இ தொழில் துறையினரைப் பாதுகாக்க மூலப்பொருள் விலை கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். என்ஜினீயரிங் ஜாப் ஆா்டா்கள் செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு 12 முதல் 18 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி பேசும்போது, மத்திய அரசு குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மூலப்பொருள் விலை உயா்வு என்பது தற்காலிகமானதுதான் என்றாலும் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஜிஎஸ்டி குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.
வேலைவாய்ப்பு அதிகம் உருவாக்கும் துறையாக எம்எஸ்எம்இ துறை இருப்பதால், துறைசாா் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழில் நிறுவனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது என்றாா்.
முன்னதாக கொடிசியாவின் தொழில் நிறுவனங்களுக்கான தகவல் கையேட்டை அவா் வெளியிட்டாா். கொடிசியா தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.