விழுப்புரம்: இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் நினைவு நாளையொட்டி, அவர்களது நினைவுத் தூண்களில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தனித்தனியே மரியாதை செலுத்தினர்.
1987-ஆம் ஆண்டில் இட ஒதுக்கீடு கோரி தமிழகத்தின் விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பல்வேறு இடங்களில் உயிர் நீத்தனர்.
இவர்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தின் சித்தணி, பார்ப்பனப் பட்டு, பனையபுரம் , கோலியனூர், கடலூர் மாவட்டத்தின் கொள்ளுக்காரன் குட்டை ஆகிய இடங்களில் நினைவுத் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
21 தியாகிகளின் நினைவு நாளையொட்டி, ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் நாள் பாமக சார்பில் அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் 21 தியாகிகளின் உருவப் படங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து திண்டிவனத்தில் வன்னியர் சங்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ், தொடர்ந்து சித்தணி, பனையபுரம், கோலியனூர், கொள்ளுக்காரன் குட்டை ஆகிய இடங்களில் உள்ள நினைவுத் தூண்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாமக நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி , பாமக முன்னாள் தலைவர் தீரன், தலைமை நிலையச் செயலர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, தியாகிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி மற்றும் புத்தாடைகளை ராமதாஸ் வழங்கினார்.
இதுபோன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திண்டிவனத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 21 தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து சித்தணி, பார்ப்பனப்பட்டு, கோலியனூர், கொள்ளுக்காரன் குட்டை ஆகிய இடங்களில் உள்ள நினைவுத் தூண்களுக்கும் மலர் வளையம் வைத்து அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.