நெல்லையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியமாக இருசக்கர வாகன ஓட்டியுடன் வாக்குவாதம் செய்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகரின் மேற்கு சரகத்துக்குட்பட்ட டவுண் கல்லணை பள்ளி அருகே புதன்கிழமை இரவு சிறப்பு சார்பு ஆய்வாளர் காந்திராஜன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபரை அவர் மறித்துள்ளார். வாகன ஓட்டியிடம் காந்திராஜன் அவதூறாகப் பேசி தவறாக நடந்துகொண்டதாக தெரிகிறது.
சம்பவத்தின் அடுத்தகட்டமாக, சிறப்பு சார்பு ஆய்வாளர் காந்திராஜன் ஓட்டிச் சென்ற காரானது, இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த நபர் மீது பின்னால் இருந்து மோதியுள்ளது. கார் மோதிய வேகத்தில் அந்த நபர் கீழே விழுந்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் காந்திராஜன் காரை விட்டு ஏற்றுவதுபோல் சென்றுள்ளார். இதனால், அந்த நபர் காருடன் சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதையடுத்து "காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... " என்று அந்த நபர் கதறியுள்ளார். அந்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடியோவை பார்த்த பொதுமக்கள், காவல்துறையின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காந்திராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்
இந்த பரபரப்பான சம்பவங்களின் புகாரின் அடிப்படையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் காந்திராஜனை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் உத்தரவிட்டார்.
இதுகுறித்து நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் கூறுகையில், "இருசக்கர வாகன ஓட்டுநரிடம் மோசமான செயலில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் காந்திராஜன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று அவர் உறுதியளித்துள்ளார்.
காவல்துறை மீது களங்கம்
மக்களின் பாதுகாப்பிற்காகச் செயல்பட வேண்டிய ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது, மக்கள் மத்தியில் காவல்துறையின் மீதான நம்பகத்தன்மையைக் குலைப்பதாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.