அதிமுகவுக்கு அமித்ஷா வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.
தூத்துக்குடியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது:
வரதட்சிணை பழக்கம் அடியோடு மறைய வேண்டுமென்றால், கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் அவா்களது குடும்பங்களில் இருந்து இந்த மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகிறது மோடி அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து பழிவாங்குகின்றனர். அண்ணாமலை லண்டனுக்கு சென்று தான் அரசியல் படிக்க வேண்டுமா? இங்கே இருக்கிற அடுப்பாங்கரையில் இருந்தே படித்து விடலாம்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கம்யூனிஸ்ட்களை பார்த்து, முன்பெல்லாம் நீங்கள் அதிகம் போராடுவீர்கள். இப்போது நீங்கள் போராடுவதே கிடையாது. திமுகவை நீங்கள் ரொம்ப தடவி கொடுக்கிறீர்கள், திமுக உங்களை விழுங்கிவிடும் என்கிறார். திமுக பாம்பும் இல்லை, திமுக பாம்பும் இல்லை, கம்யூனிஸ்ட் கட்சி தவளையும் இல்லை. அவா் தான் அதிமுகவை கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவா்களை பாஜக விழுங்கிவிடும்.
அதிமுக கட்சி உள்விவகாரத்தில் அமித்ஷா தலையிடுகிறார். அவருடைய வீடுதான் நீதிமன்றமாக இருக்கிறது.
எங்களுக்கு கூட்டணி தா்மம் கிடையாது. மக்கள் தா்மம்தான் உண்டு. கூட்டணி வைப்பது மக்களின் நலனுக்காகத் தான். அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அப்போது எந்தக் கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.