கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டிருந்த நிலையில், திராவிட மாடல் அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் மக்களுடன் ஸ்டாலின் செயலியில் அனுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு உங்களில் ஒருவன் பதில்கள் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
ஜெர்மன், லண்டன் பயணங்கள் குறித்தும், திராவிட மாடல் அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் மக்களுடன் ஸ்டாலின் செயலியில் அனுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு உங்களில் ஒருவன் பதில்கள் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார்.
விடியோவில் அவர் தெரிவித்ததாவது,
* தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று எதற்கு சொல்கிறீர்கள்?
பாஜக எப்படியெல்லாம் தமிழ்நாட்டை குறி வைத்திருக்கிறார்கள் என்று முப்பெரும் விழாவில் பேசும்போதே சொல்லியிருந்தேன். அவர்களால் நேராக நுழைய முடியவில்லை என்று அதிமுகவுடன் சேர்ந்துகொண்டு, என்னென்ன செய்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லியிருந்தேன். தொகுதி மறுவரையறை, நீட், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்(எஸ்ஐஆர்), கல்வி நிதி மறுப்பு, இந்தி திணிப்பு, கீழடி அறிக்கையை மறைப்பது என்று இந்த லிஸ்ட் பெரிதாக இருக்கிறது. இதையெல்லாம் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி கடுமையாக எதிர்ப்பதால்தான் திமுகவை டார்கெட் செய்கிறார்கள். அவர்கள் கூட்டணிக்குள்ளேயே பல குழப்பங்கள் இருந்தாலும், திமுக வந்துவிடக் கூடாது என்று குறியாக இருக்கிறார்கள். பா.ஜ.க.வை எதிர்ப்பதாக வெளியில் நிறைய பேர் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அனுபவம், வலிமை, கொள்கைத் தெளிவுடன் பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிடம் மட்டும்தான் இருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான், திமுக ஆட்சி நீடித்தால்தான் தமிழ்நாடு இதேபோன்று, தொடர்ந்து தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்று தெளிவாக இருக்கிறார்கள்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரத்தில் முன்னெடுப்பில், ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சேர்த்து, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் இருக்கும் உணர்வை தான் முப்பெரும் விழாவிலும் வெளிப்படுத்தி இருக்கிறோம்.
* தாயுமானவர் – அன்புக்கரங்கள்என்று தொடர்ந்து புது புது திட்டங்களாக தொடங்கிக்கொண்டே இருக்கிறீர்களே...?
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, மக்களைத் தேடி மருத்துவம் என்று ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இதில் பல திட்டங்களை மற்ற மாநிலங்களிலும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர் திட்டம், அன்புக் கரங்கள், போன்ற திட்டங்களைத் தொடங்கி இருக்கிறோம்.
இந்தத் திட்டங்களைப் பற்றி, நான் சொல்வதைவிட பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்று நான் பார்த்த சில பேட்டிகளை இப்போது “ப்ளே” செய்கிறேன்... என்று குறிப்பிட்டார்கள். (பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் பயன்களைக் கூறி முதல்வர் நன்றி தெரிவித்த மக்களின் பேட்டிகள் ஒளிபரப்பப்பட்டன) அதனைத் தொடர்ந்து முதலல்வர் இதெல்லாம் தொடக்கம்தான்! எங்களுக்கு இன்னும் நிறைய பணிகள் இருக்கிறது. நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். நான் ஏற்கனவே சொன்னது போன்று, இந்த நூறாண்டுகளில் நாம் அடைந்திருக்கும் முன்னேற்றம் என்பது ஒரு குழந்தை நடைபழகுவது போன்றதுதான். இன்னும் நாம் உலக அளவில் போட்டி போட்டு ஓடவேண்டும்! அதற்கான பணிகள் திராவிட மாடல் 2.0-விலும் தொடரும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.