வலைதளங்களில் வைரலாகும் நாதக வேட்பாளரின் கையப்பமிட்ட பத்திரம்: அதில் அப்படி என்ன இருக்கிறது?
வலைதளங்களில் வைரலாகும் நாதக வேட்பாளரின் கையப்பமிட்ட பத்திரம் குறித்து...
கோவை: சொன்னதைச் செய்யாவிட்டால் குறிப்பிட்ட நாளில் ராஜிநாமா செய்வேன் என செஞ்சேரிமலை முருகன் முன்பு, நூறு ரூபாய் பத்திரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன் கையெப்பமிட்ட பத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சூ.ராஜசேகரன், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று செஞ்சேரிமலை முருகன் முன்பாக நூறு ரூபாய் முத்திரைத்தாளில் உறுதிமொழி எழுதி, செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளாரிடம் அந்தப் பத்திரத்தை சமர்ப்பித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இது அந்த பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றால் நியாய விலை கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மின்சார வசதி, தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைத்தல், வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றுதல், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணுதல் மற்றும் ஆனைமலை - நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வேன் என்றும் அந்தப் பத்திரத்தில் குறிப்பிட்டு அவர் கையெழுத்திட்டுள்ளார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ராஜசேகரன், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் என்பவர் வெறும் அதிகாரம் செய்பவராக மட்டும் இருக்கக்கூடாது; மக்களின் தேவைகளை உணர்ந்தவராகவும், அவற்றிற்குத் தீர்வு காண்பவராகவும் இருக்க வேண்டும். இதுவே எங்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொள்கையாகும்.
மக்களிடம் உண்மையான நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யப்போகும் செயல்களை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளோம். வெற்றி பெற்றவுடன் இவை அனைத்தும் உடனடியாகச் செயல்படுத்தப்படும், தவறும் பட்சத்தில் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். அரசியல் களத்தில் வழக்கத்திற்கு மாறாக, வேட்பாளர் ஒருவர் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை வழங்கியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாகி வருகிறது.