முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்கிரைப் நியமனம் சம்பந்தமாக தேர்வுத்துறை இயக்குநரின் சுற்றறிக்கையை ரத்து செய்திடுக: பெ. சண்முகம்

ஸ்கிரைப் நியமனம் சம்பந்தமாக தேர்வுத்துறை இயக்குநரின் சுற்றறிக்கையை ரத்து செய்திட வேண்டுவது தொடர்பாக...

Updated On : 5 பிப்ரவரி 2026, 12:09 pm IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் - கோப்புப் படம்
பகிர்:

மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு எழுதும் ஸ்கிரைப் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மேற்கொண்ட பணிக்கு மாறாக, கல்லூரியில் படிக்கும் மாணவர்களையும், தன்னார்வலர்களாகவும் நியமிக்க வேண்டுமென அரசு தேர்வுத்துறை இயக்குநரின் சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், பத்தாம் வகுப்புமற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் கண் பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்ப்பேச இயலாதோர், எதிர்பாராத விபத்தால் கை முறிவு ஏற்பட்டு தேர்வு எழுத இயலாதோர், மன நலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறைபாடு உள்ளவர்கள், நரம்பியல் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வு எழுதும் போது சொல்வதை எழுதுபவர்கள் (ஸ்கிரைப்) நியமனம் செய்யப்படுவர்.

அப்படி நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களாக இருப்பார்கள். தற்போது, அரசு தேர்வுத்துறை இயக்குநர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2026 ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர்களாக கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து, வருகின்ற திருப்புதல் தேர்விலும், மார்ச், ஏப்ரல் மாத பொதுத் தேர்விலும் நியமிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது ஆசிரியர்கள் மத்தியிலும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு பயிற்சியும் இல்லாமல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களையும், தன்னார்வலர்களையும் ஸ்கிரைப்பாக நியமிப்பது மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி பெறும் வாய்ப்பை மறுதலிக்கும் செயலாகும். மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் நன்றாக படித்துச் சொல்லும் போது, ஸ்கிரைப்பாக எழுதுபவர் சரியாக பிழை இல்லாமல் எழுதினால் மட்டுமே தேர்ச்சிப் பெற முடியும்.

ஆனால், ஆசிரியர்களாக இல்லாமல் வேறொருவரை நியமித்தால் அவர்கள் பிழையோடு எழுதும் போது மதிப்பெண் குறைந்தும், தேர்ச்சிப் பெறாமலும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேற்படி குறைபாடு உள்ள மாணவர்களை கையாள்வதற்கே உரிய பயிற்சி தேவை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, அமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் கல்வி நலன்களை பாதுகாக்கும் வகையில் ஸ்கிரைப் சம்பந்தமாக எந்தவித பயிற்சியும் இல்லாத கல்லூரியில் படிக்கும் மாணவர்களையும், தன்னார்வலர்களையும் நியமிக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக ரத்து செய்திடவும், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களையே ஸ்கிரைப்பாக நியமிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டுமென சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

summary

Cancel the circular of the Director of Examinations regarding the appointment of scribes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.