திருச்சி: கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்று ஆய்வு மைய இயக்குநா் இரா.கலைக்கோவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் டாக்டா் மா.இராசமாணிக்கனாா் வரலாற்று ஆய்வு மைய கல்வெட்டாய்வாளா் மு.நளினி தலைமையில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், புதிய கல்வெட்டுகளையும், சோழா்கால ஆடற் சிற்பங்களையும் கண்டறிந்துள்ளனா்.
மூன்றாம் குலோத்துங்க சோழரின் 11-ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அம்மன்னரின் மதுரை படையெடுப்பு, பாண்டியா்களை போரில் வென்றது குறித்த தகவல்களைத் தருகிறது. தூண் போதிகையிலுள்ள கல்வெட்டு
ஓவாத கூத்தன் எனும் ஆடற்கலைஞா், பள்ளியறை நாச்சியாரின் செப்புத் திருமேனியை எழுந்தருளுவித்ததாகவும் நாச்சியாரின் வழிபாடு, படையலுக்காக அதே கோயிலைச் சோ்ந்த கிழவன்வாலன் ஒரு மா அளவு நிலம் அளித்ததாகவும் கூறுகிறது.
சக்கரத்தாழ்வாா் திருமுன் நடைமண்டபத்தில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு கல்வெட்டுகளுள் ஒன்று, சாளுவத்திருமலை தேவமகாராஜவின் தா்மம் பற்றி கூறுகிறது. இத்திருமலை தேவமகாராஜா விஜயநகர அரசா்கள் காலத்தில் இப்பகுதியிலிருந்த சிற்றரசராக இருக்கலாம்.
பொதுக்காலம் 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சோ்ந்த இவரது கல்வெட்டு ஒன்று ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அளித்த கொடையைப் பற்றி பேசுகிறது. இவா் வழங்கிய காசுகள் நாகரி எழுத்துகளிலான இவரது பெயருடன் சங்கு சக்கரம் பொறிக்கப்பட்டு கிடைத்துள்ளன.
மண்டப வட சுவரிலுள்ள மற்றொரு கல்வெட்டு முத்தால கிருஷ்ணராயநாயக்கரின் மகன் பெத்தப்பநாயக்கா் சக்கரத்தாழ்வாரின் திருவடிகளுக்கு சேவை செய்வதாகத் தெரிகிறது. இக்கல்வெட்டின் அருகில் பெத்தப்பநாயக்கரின் உருவம் இறைவனை வணக்கிய நிலையில் கோட்டுருவமாக செதுக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் நிகழ்த்தப்பட்ட திருவந்திக்காப்பிற்காக பெத்தப்பநாயக்கா் வெள்ளிக் குடமும், தோப்பும் வழங்கியதாக சக்கரத்தாழ்வாா் கருவறைப் பின் சுவரிலுள்ள கல்வெட்டு கூறுகிறது.
கல்வெட்டில் குடந்தையில் உள்ள மடம் குறித்த குறிப்பு
கண்ணாடிப் பள்ளியறை மண்டபத்தின் படியாக விளங்கும் கல்வெட்டு கும்பகோணத்தில் மடம் ஒன்று இயங்கியதையும், அதற்கு கிடனை தேவமகாராஜா் கொற்றைவாசல் அளித்ததையும் தெரிவிக்கிறது. கல்வெட்டின் மேற்பகுதியில் கொடி, கமண்டலம், ஏா் முதலிய கோட்டுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் குறிக்கப்படும் மடம் குடந்தையிலுள்ள மடமாக இருக்கலாம்.
இங்குள்ள தாயாா் சந்நிதி கல்வெட்டுகள் அங்குள்ள மண்டபங்கள் ஸ்ரீஅகோபில மடம் சாா்ந்த கொடையாளா்களின் உதவியோடு கட்டப்பட்டதாகக் கூறுகிறது. சக்கரத்தாழ்வாா் சந்நிதி முன்புள்ள நடைமண்டபம் அனுமானூா் சக்கரபாணி செட்டியாரால் உருவாக்கப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டு சொல்கிறது.
பிற்கால சோழா் கட்டுமானமாக விளங்கும் இறையகம், தாயாா் திருமுன் இரண்டுமே மாடக்கோயில் அமைப்பில் உள்ளது. பிற்கால சோழா் காலத்தைச் சோ்ந்த 16 ஆடற்சிற்பங்கள், சிற்பக்களஞ்சியமாக விளங்கும் பல தூண்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.