முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது: ஜி.கே. வாசன்

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியது...

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 10:12 AM
செய்தியாளா்களுக்குப் பேட்டி அளிக்கிறாா் தமாகா தலைவா் ஜி.கே.வாசன். - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மண்டல, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் ஜி.கே வாசனிடம் விருப்பமனுவை வழங்கினர்.

முன்னதாக, ஜி.கே.வாசன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

Advertisement

தமிழக அரசின் இடைக்கால வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.

மக்கள் மன நிலைக்கு நேர் மாறான கூட்டணி

திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது தமிழக வாக்காளர்களின் எதிர்காலத்திற்கும், எண்ணத்திற்கு நேர்மாறாக உள்ளது. விஜயகாந்த் இருந்தவரை திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. திமுக-தேமுதிக கூட்டணி மக்கள் மன நிலைக்கு நேர் மாறான கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் மக்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.

அதிமுக கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது

ஜனநாயகத்தில் கூட்டணியை தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையிலான அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது.

சரியான அழுத்தம் கொடுக்கவில்லை

மாநில சுயாட்சிக்காக சட்டத்தை திருத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய ஆட்சியில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய போதெல்லாம் மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு போன்றவற்றுக்கு திமுக சரியான அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசில் நல்ல இலாகாக்களை பெறுவதில்தான் போராடி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாஜகவுடன் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் கூட அதை வலியுறுத்தவில்லை. பிரதமர்களிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாக தெரியவில்லை.

தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும் என்பதை நோக்கியே எனது கவனம் உள்ளது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் செயல்பட்டு வருகிறேன்.

மாநிலங்களவை உறுப்பினர் குறித்து யோசிக்கவில்லை

மாநிலங்களவை உறுப்பினர் குறித்து எதுவும் தற்போது நாங்கள் யோசிக்கவில்லை. தமாகா-வை பொருத்தவரை கூட்டணியின் வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் முதல் பணி.

கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் தமாகா

வெற்றி தான் இலக்காக இருக்க வேண்டும். லாப நஷ்டங்களை தாண்டி கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி தமாகா.

திமுக அரசின் மீது மக்கள் கோபமாக இருப்பதால் மாநில சுயாட்சி, ஆளுநர் மீது புகார் என மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு வரிகள் மூலம் சுமையை ஏற்றிய அரசு திமுக அரசு. மக்களை ஏமாற்றிய திமுகவை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள்.

பல்வேறு நெருக்கடிகள்

காங்கிரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக - காங்கிரஸ் கூட்டணி தான். சுக்கு நூறான பொருளை எப்படி ஒட்ட நினைத்தாலும் அது மீண்டும் சுக்கு நூறாகதான் போகும். அதுபோல தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி உள்ளது என்றார்.

summary

DMDK joining DMK alliance goes against people's sentiments says G.K. Vasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments