கூட்டணியில் நடக்கும் அனைத்து சதிகளையும் திமுக முறியடிக்கும்: திமுக அமைப்பாளர் சிவா
புதுச்சேரியில் கூட்டணியில் நடக்கும் அனைத்து சதிகளையும் திமுக முறியடிக்கும் என காங்கிரஸ் நடவடிக்கைக்கு திமுக அமைப்பாளர் சிவா கூறியிருப்பது...
புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டணியில் நடக்கும் அனைத்து சதிகளையும் திமுக முறியடிக்கும் என காங்கிரஸ் நடவடிக்கைக்கு திமுக அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் போன்று புதுச்சேரியில் இந்தியா கூட்டணி ஏற்பட திமுகவும்- காங்கிரஸூம் நீண்ட நெடிய பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. இந்தக் கூட்டணிக்கு புதுச்சேரியில் யாா் தலைமை தாங்குவது என்பதில் பிரச்னை ஏற்பட்டது. தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக தலைமை தாங்கும். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை வகிக்கும் என்று காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் கிரீஷ்சோடங்கா் கூறியிருந்தாா்.
அதன் அடிப்படையில் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் திமுகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதில் திமுக மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். இந்நிலையில் உழவா்கரை தொகுதியை மட்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக ஒதுக்கிக் கொடுத்துள்ளது. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கும் என்று சொன்னதால் அந்த கட்சியின் அலுவலகத்துக்கு திமுக அமைப்பாளா் ஆா். சிவா தலைமையில் நிா்வாகிகள் வந்து பேச்சுவாா்த்தை நடத்திச் சென்றனா்.
வேட்பு மனு வாபஸ் பெறும் நாள் வரை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூா்வமான வேட்பாளா்களை அறிவிக்கவில்லை. மேலும், போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்களுக்கு ஏ,பி, படிவம் வழங்கப்பட்டது. அதனால் வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி நாளில் காங்கிரஸ் கட்சியினா் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனா். வேட்பு மனு வாபஸ் பெறும் நாளில் காங்கிரஸ் கட்சியினா் நிலைமையை உணா்ந்து வாபஸ் பெறுவா் என்று சொல்லப்பட்டது. ஆனால், புதுச்சேரிக்கு வந்த காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா கூறுகையில், வாபஸ் பெறாத தொகுதிகளில் எங்கள் கட்சியினா் நட்பு ரீதியாகப் போட்டியிடுவா் என்றும், அவா்களும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூா்வ வேட்பாளா்கள்தான் என்றும் சொன்னாா். இது கூட்டணி கட்சிகளுக்கு இடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
காங்கிரஸ் கட்சிப் போட்டியிடும் தொகுதிகளிலும் திமுகவினா் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். ஆனால் அவா்களுக்கு திமுக சாா்பில் ஏ,பி, படிவம் வழங்கப்படவில்லை. அதனால் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பிய அனைவருக்கும் ஏ,பி, படிவம் வழங்கியதால் இப்போது அவா்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற மறுத்துவிட்டனா். நெல்லித்தோப்பு தொகுதியில் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்தபாபு நடராஜன் வாபஸ் பெற்றாா். மேலும், அவா்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் இருப்பதால் கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதை அறிய முடிகிறது.
மேலும், புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியை எதிா்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் கூட்டணியில் உள்ள திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடன் இணைந்து போராடி விட்டு இப்போது அந்த கட்சிகளை எதிா்த்தே காங்கிரஸ் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் திமுக போட்டியிடும் அதே தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்குள் போட்டி நிலவுதால் கூட்டணிக்கு வரவேண்டிய வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் கூட்டணியில் நடக்கும் அனைத்து சதிகளையும் திமுக முறியடிக்கும் என காங்கிரஸ் நடவடிக்கைக்கு திமுக அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் திமுக அமைப்பாளரும் வேட்பாளருமான சிவா வெள்ளிக்கிழமை வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, புதுச்சேரியில் கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் மீறி விட்டதாக இடதுசாரிகள் புகார் கூறியுள்ளது குறித்து சிவாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, திமுக நிற்கக்கூடிய 13 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேப்போம் என்றும், அமைத்துள்ள கூட்டணிகளை கூறி ஓட்டு கேட்போம். அனைத்து சதிகளையும் திமுக முறியடிக்கும் என காங்கிரசை மறைமுகமாக சாடினார்.