முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம் கோலாகலம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம் குறித்து...

Updated On : 19 பிப்ரவரி 2026, 10:42 am IST
திருச்செந்தூா் அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம்
பகிர்:

திருச்செந்தூர்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். அந்தவகையில், மாசித்திருவிழா (பிப்.10) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நடைபெற்ற ஒன்பது நாள்களும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Advertisement

Advertisement

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் காலை 7.30 மணியளவில் சர்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரத வீதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முருகப்பெருமான்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரை திருக்கோயில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், மண்டல தணிக்கை அலுவலர் இன்பமணி, தலைமை கணக்கர் அம்பலவாணன், பணியாளர்கள் மாரிமுத்து, ஆறுமுகராஜ், நெல்லையப்பன், கோயில் பாதுகாவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் கோயில் இன்ஸ்பெக்டர் கனகராஜன், எஸ்ஐக்கள் சுப்பிரமணியன், பாஸ்கர் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

summary

Masi chariot parade at Veylukandamman Temple in Tiruchendur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.