அமைச்சர் கே.என். நேரு மீதான பொய் வழக்கைச் சட்டரீதியாக எதிர்கொண்டு திமுக முறியடிக்கும் என்று திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
அமைச்சர் கே.என். நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இருவரும் வெள்ளிக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, ஆர். எஸ். பாரதி பேசுகையில், அமைச்சர் கே.என். நேரு அவர்கள் மீது சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருந்த போது, அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்ததாகச் சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சிபிஐ வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த முக்கிய வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சிபிஐ வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அமலாக்கத்துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் அவர்கள் தமிழ்நாடு அரசை நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டனர்.
முதல்வர், கே.என். நேருவை கட்சியின் மூத்த தலைவர் என்றோ கட்சியின் முதன்மைச் செயலாளர் என்றோ கூடப் பார்க்காமல் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். தற்போது அந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு ஏற்கனவே விசாரணை நடத்திக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இது ஒன்றும் பின்னடைவு அல்ல, திமுகவின் சட்டத்துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறியடிக்கத் தயாராக இருக்கிறது.
வழக்குகளை எதிர்கொண்டு வென்று காட்டியவர் நேரு
அமைச்சர் கே.என்.நேரு மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல வழக்குகளை தொடுத்திருக்கிறார். அத்தனை வழக்குகளையும் எதிர்கொண்டு வென்று காட்டியவர்தான் நேரு முதன்மைச் என்றார்.
திமுகவின் மதிப்பை கெடுப்பதற்கான சூழ்ச்சிகள்
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதிலில், பாஜக அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை நள்ளிரவில் கைது செய்து 100 நாட்கள் சிறையில் வைத்தும், மூன்று ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 2016-இல் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி வழக்கில் 10 ஆண்டுகள் ஆகியும் சிபிஐ இதுவரை முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்யவில்லை. இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் முதல்வர் மற்றும் திமுகவின் மதிப்பை கெடுப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகள்.
அச்சுறுத்தல்களுக்குப் பயப்பட மாட்டார் நேரு
அமைச்சர் நேரு தற்போது 41 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தேர்தல் பணியைப் பார்த்துப் பொறாமைப்பட்டு எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரில் தில்லியில் இருப்பவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஆனால் அமைச்சர் நேரு இத்தகைய அச்சுறுத்தல்களுக்குப் பயப்பட மாட்டார்; தட்டத் தட்ட பந்து எழும்புவது போல இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவார் என்று ஆர். எஸ். பாரதி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.