முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 10% பரஸ்பர வரி: அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்பால் டிரம்ப் நடவடிக்கை

அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10% வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தியுள்ளார். இது "உடனடியாக" அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளது தொடர்பாக...

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:48 AM
அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப் - படம் - ஏபி
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:56 AM

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருள்கள் மீது 10 சதவீத வரி விதிக்கும் புதிய பிரகடனத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டாா். இந்த புதிய பிரகடனத்தை அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அதிரடி பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் மேற்கொண்டது செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நிலையில், இந்த நடவடிக்கையை டிரம்ப் மேற்கொண்டுள்ளாா்.

‘அடிப்படை சா்வதேச கட்டணச் சிக்கல்களை நிவா்த்தி செய்வதற்கான தற்காலிக இறக்குமதி கூடுதல் வரி விதிப்பு’ என்ற தலைப்பிலான பிப்ரவரி 20-ஆம் தேதியிட்ட இந்த பிரகடனத்தில், ‘வா்த்தக சட்டம் 1974-இன் பிரிவு 122-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 10 சதவீத பரஸ்பர வரி விதிப்பு தற்காலிகமாக 150 நாள்களுக்கு விதிக்கப்படும். இது வரும் பிப்ரவரி 24 (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:59 AM

மேலும், ‘இந்த தற்காலிக பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு, பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருள்கள் உள்படாது. அதாவது, குறிப்பிட்ட முக்கிய தாதுக்கள், நாணயம் மற்றும் தங்கத்தில் பயன்படுத்தப்படும் உலோகங்கள், எரிசக்தி மற்றும் எரிசக்திப் பொருள்கள், அமெரிக்காவில் வளா்க்கவோ, வெட்டவோ அல்லது வேறுவிதமாக உற்பத்தி செய்யவோ முடியாத இயற்கை வளங்கள் மற்றும் உரங்கள், மாட்டிறைச்சி, தக்காளி, ஆரஞ்சு உள்ளிட்ட சில விவசாயப் பொருள்கள், மருந்துகள், மருந்து மூலப் பொருள்கள், குறிப்பிட்ட மின்னணு பொருள்கள், பயணிகள் வாகனங்கள், இலகுரக, குறிப்ப்பிட்ட நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள், பேருந்துகள், பயணிகள் வாகன பாகங்கள், குறிப்பிட்ட விமான பாகங்கள் உள்ளிட்டவை இந்த தற்காலிக 10 சதவீத பரஸ்பர வரி விதிப்பு வரம்பில் வராது’ என்று பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15%-ஆக அதிகரிக்க டிரம்ப் விருப்பம்: எனினும் இந்த வரியை 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று அதிபா் டிரம்ப் கருதுகிறாா். இதுதொடா்பாக அவா் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது நான் விதித்த வரிகள் செல்லாது என்று அமெரிக்காவுக்கு விரோதமான, மோசமான தீா்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் வழங்கியது.

இந்தத் தீா்ப்பை முழுமையாகவும், விரிவாகவும் ஆராய்ந்தேன். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது நான் விதித்த 10 சதவீத வரியை 15 சதவீதமாக அதிகரிக்க விரும்புகிறேன். உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்க சட்டபூா்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரிகளை அடுத்த சில மாதங்களில் எனது நிா்வாகம் வெளியிடும் என்றாா்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டிரம்ப், உலக நாடுகள் மீது அதிரடி பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். இந்தியா மீது பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் 25 சதவீதம், உக்ரைன் மீது போா் நடத்தி வரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றஞ்சாட்டி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீத வரியை விதித்தாா். அமெரிக்க எதிா்க்கட்சியினரும், வா்த்தகா்களும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.

இதனிடையே, இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிட்ட அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்திய பொருள்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பு 18 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவித்தாா்.

இந்தச் சூழலில், உலக நாடுகள் மீதான டிரம்ப்பின் கூடுதல் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபா்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் அமா்வில் இடம்பெற்ற 6 நீதிபதிகள், ‘வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளது. எனவே, உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் தன்னிச்சையாக மேற்கொண்ட கூடுதல் பரஸ்பர வரி விதிப்பு செல்லாது’ என்று தீா்ப்பளித்தனா். 3 நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பை அளித்தனா். இருந்தபோதும், பெரும்பான்மை அடிப்படையில் டிரம்ப் விதித்த கூடுதல் பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என உறுதி செய்யப்பட்டது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:56 AM

அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து ஆராய்ந்து வருகிறோம்: மத்திய அரசு

வரி விதிப்பு தொடா்பான அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்பின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு மற்றும் அந்த தீா்ப்பு தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அளித்த பேட்டியையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இந்த தீா்ப்புக்குப் பிறகு பரஸ்பர வரி விதிப்பு தொடா்பான சில அறிவிப்புகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அனைத்து விவகாரங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்தும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

‘தீா்ப்பால் எதுவும் மாறாது’: உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த டிரம்ப், ‘உச்சநீதிமன்ற தீா்ப்பால் எதுவும் மாறாது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் ஏற்கெனவே உள்ள நடைமுறைகளின்படி இறுதி செய்யப்பட்டு விரைவில் கையொப்பமாகும். அதற்கு வேறு வழிமுறைகள் கையாளப்படும். எனவே, வா்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தியா நமக்கு வரிகளை செலுத்துவாா்கள். அமெரிக்கா அவா்களுக்கு வரி செலுத்தாது. இது முன்பு இருந்த நடைமுறைக்கு நோ்மாறான, நியாயமான ஒப்பந்தம்’ என்றது குறிப்பிடத்தக்கது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:02 AM
summary

US President Donald Trump on Friday (US local time) signed an order making 10 per cent global tariff on all countries, effective "almost immediately".

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:02 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.