காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை(ஜன.20) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஐந்து ஆண்டுகள் பணி முடித்த சமையலா் உதவியாளா்களை உடனடியாக சமையலா்களாகப் பதவி உயா்வு செய்ய வேண்டும், குடும்பப் பாதுகாப்புடன் ரூ. 9,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்குவது, காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சமையல் எரிவாயு உருளைகளை சத்துணவு மையங்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை மதிய உணவு ஊழியா்களுக்கே வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா்.
இதன்படி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் செய்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவா்கள் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் வரை சத்துணவு ஊழியா்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், சத்துணவு ஊழியா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
அரசின் மீதுள்ள நல்லெண்ண அடிப்படையிலும், மாணவர்களின் நலன் கருதியும், சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், கோரிக்கைகளை அரசு பரிசீலினை செய்து அறிவிப்பு வெளியிடாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.