அஞ்சலக விதிமுறைகள் 2024-ஐ மீண்டும் பரிசீலனை செய்து, கால இடைவெளியைப் பொருட்படுத்தாமல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து இதழ்களுக்கும் மீண்டும் அஞ்சல் சலுகைகளை வழங்க வேண்டும் என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம். சிந்தியாவுக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்தியாவின் விடுதலைப் போராட்டமும், ஜனநாயகப் பயணமும் அச்சு ஊடகங்களின் வலிமையால் வடிவமைக்கப்பட்டவை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களைத் தூண்டிய தேசிய இதழ்கள் முதல், மொழி, கலாச்சாரம் மற்றும் பொதுநலனை வளர்க்கும் இன்றைய இதழ்கள் வரை, நமது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு விழுமியங்களையும் வலுப்படுத்துவதில் இதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தியாவின் விடுதலைப் போராட்டமும், ஜனநாயகப் பயணமும் அச்சு ஊடகங்களின் வலிமையால் வடிவமைக்கப்பட்டவை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களைத் தூண்டிய தேசிய இதழ்கள் முதல், மொழி, கலாச்சாரம் மற்றும் பொதுநலனை வளர்க்கும் இன்றைய இதழ்கள் வரை, நமது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு விழுமியங்களையும் வலுப்படுத்துவதில் இதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தச் சூழலில், அண்மைய 'அஞ்சலக விதிமுறைகள் 2024' (Post Office Regulations 2024) காரணமாக சிறு மற்றும் நடுத்தரப் பதிப்பாளர்கள் சந்திக்கும் கடுமையான சவால்களைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
புதிய வரைமுறை மற்றும் விதிமுறைகளின்படி, ஏழு நாட்கள் வரையிலான கால இடைவெளியில் வெளிவரும் இதழ்கள் மட்டுமே 'பதிவு செய்யப்பட்ட செய்தித்தாள்களாக' (Registered Newspapers) கருதப்படுகின்றன. ஏழு நாட்களுக்கு மேல் கால இடைவெளி கொண்ட இதழ்கள் 'காலமுறை அஞ்சல்' (Periodical Post) பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு, அவற்றுக்கு நீண்டகாலமாக வழங்கப்பட்டு வந்த அஞ்சல் சலுகைகள் மறுக்கப்படுகின்றன.
இந்த மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் கடுமையானவை:
கட்டண உயர்வு: புதிய விதிகளின்படி, 200 கிராம் எடையுள்ள ஓர் இதழுக்கு ஒரு நகலுக்கு ரூ.9 அஞ்சல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சலுகை இழப்பு: முன்னதாக, இதே இதழ் 95 பைசா என்ற சலுகை கட்டணத்தில் அனுப்பப்பட்டு வந்தது.
நிதிச் சுமை: இது ஒரு நகலுக்கு ரூ.8.05 கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. வணிக நோக்கம் அன்றி, பொதுநலன் சார்ந்த இதழியல் நடத்தும் பதிப்பாளர்களால் இந்தச் சுமையைத்தாங்க இயலாது.
வாழ்வாதார அச்சுறுத்தல்: இவ்வளவு செங்குத்தான கட்டண உயர்வு, இலக்கியம், சமூக சீர்திருத்தம், பொதுக் கொள்கை மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் இருவார மற்றும் மாத இதழ்களைத் தொடர்ந்து நடத்துவதை பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றதாக மாற்றுகிறது.
இவற்றில் பல இதழ்கள் லாப நோக்கிலான நிறுவனங்கள் அல்ல; மாறாக மொழிப் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும், விவாதங்களை ஊக்குவிக்கும் மற்றும் விளிம்புநிலை மக்களின் குரலாக ஒலிக்கும் கலாச்சாரக் கருவிகளாகும். இவற்றை நலிவடையச் செய்வது, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் நோக்கத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.
தகவல் பரிமாற்றம் ஒரு பொதுச் சேவை என்பதை அங்கீகரித்து, இந்திய அரசு வரலாற்று ரீதியாக அஞ்சல் சலுகைகளை வழங்கி வந்துள்ளது. தற்போதைய விதிமுறைகள் நிர்வாகக் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தாலும், அவை தசாப்தங்களாக சமூக விழிப்புணர்விற்கும் தேசக் கட்டமைப்பிற்கும் பங்களித்து வரும் பல இதழ்களை முடக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன.
எனவே, அஞ்சலக விதிமுறைகள் 2024-ஐ மீண்டும் பரிசீலனை செய்து, கால இடைவெளியைப் பொருட்படுத்தாமல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து இதழ்களுக்கும் மீண்டும் அஞ்சல் சலுகைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.