மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் ஒம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா முக்கிய நிகழ்வாகும்.
அதன்படி தைப்பூசத் திருவிழாவானது வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
உற்சவ அம்பாள் மலர் அலங்காரத்தோடு தங்கக் கொடிமரத்திற்கு முன் எழுந்தருள, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஒம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது.
விழாவில் ஜன.24 ஆம் தேதி மர சிம்ம வாகனம், ஜன.25 ஆம் தேதி மரபூத வாகனம், ஜன.26 ஆம் தேதி மர அன்ன வாகனம், ஜன.27 ஆம் தேதி மர ரிஷப வாகனம், ஜன.28 ஆம் தேதி மர யானை வாகனம், ஜன.29 ஆம் தேதி வெள்ளி சேஷ வாகனம், ஜன.30 ஆம் தேதி வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். விழாவில் ஜன.31 ஆம் தேதி தெப்பத் திருவிழாவும், பிப் .1 ஆம் தேதி காலை 7 மணிக்கு திருக்கோயிலிலிருந்து, தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வடதிருக்காவேரி சென்றடைந்து தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான பிப்.1 ஆம் தேதி இரவு ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடம் இருந்து சீர்பெறும் நிகழ்வும், பிப்.2 ஆம் தேதி அதிகாலை மஹா அபிஷேகமும், பக்தர்களுக்கு காட்சி அளித்தல் நிகழ்வும் நடைபெற உள்ளது.
மேலும் பிப். 2 ஆம் தேதி வடதிருக்காவேரியில் இருந்து கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழி நடை உபயங்களை கண்டருளுகிறார்.
இந்நிகழ்வில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ். பி இளங்கோவன், கோயில் இணை ஆணையர் எம்.சூரியநாரயணன், அறங்காவலர்கள் இராஜ.சுகந்தி, பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் மற்றும் கோயில் மணியக்காரா் பழனிவேல் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா் சாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.