அமெரிக்கா-இஸ்ரேல் உலகப்போருக்கு வழிவகுக்கிறது: தொல். திருமாவளவன்
அமெரிக்கா-இஸ்ரேல் உலகப்போருக்கு வழிவகுக்கிறது என்று விசிக தொல். திருமாவளவன் தெரிவித்தது குறித்து...
அமெரிக்கா-இஸ்ரேல் உலகப்போருக்கு வழிவகுக்கிறது என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்ட நிலையில், அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.
சென்னையில் ஷியா முஸ்லிம் அமைப்பினர் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை பேரணியாக வந்து அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதகரகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஷியா முஸ்லிம் அமைப்பினர் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஷியா முஸ்லிம்கள் பேரணியாக வந்து அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றபோது போலீஸார் குவிக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், மனிதநேய ஜனாநயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் ஈடுப்பட்டனர்.
பேரணியில் தொல். திருமாவளவன் பேசியதாவது:
ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்தி வரும் கூட்டுத் தாக்குதலில் காமேனியை கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. அமெரிக்கா-இஸ்ரேல் உலகப்போருக்கு வழிவகுக்கிறது. இந்தியா இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பதுவேதனையாக உள்ளது. யாரெல்லாம் ஏகாதியப்பத்தியத்தை எதிர்க்கிறார்களோ அவர்களை அமெரிக்கா படுகொலை செய்து வருகிறது. வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்ட கொடுமை, எகிப்து பிரச்னை, நேபாள் புரட்சி, ஈழத்தில் நடத்த படுகொலையிலும் அமெரிக்காவுக்கு தொடர்பு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் வெறி பிடித்த மன நோயாளி. அவரது வெறித்தனத்தால் கமேனி உள்பட அவரது குடும்பமே அழிந்துள்ளது. கமேனியின் நிலைப்பாடு தான் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. கமேனி கொல்லப்பட்டிருந்தாலும் நீதியை காப்பாற்றும் நோக்கில் அவர் வெற்றி பெற்றுள்ளார். எண்ணெய் வியாபாரத்துக்கு முட்டுகட்டையாக உள்ள அனைத்து தலைவர்களையும் அழிக்க நினைக்கிறார்.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தேசிய இறையாண்மை, ஐ.நா., அனைத்து சா்வதேச ஒப்பந்தங்களையும் அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும். இந்தத் தாக்குதலால் மேற்காசிய நாடுகளில் கடுமையான பதற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டிய நேரம் இது. அமெரிக்காவுக்கு துணை நிற்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பது வெட்கக்கேடாக உள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு அமைதியாக இருப்பது வேதனையாக உள்ளது.
மேலும், உடனடியாக இந்தியா அரசு அமெரிக்காவை எதிர்த்து அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக போரை நிறுத்தக்கோரி இந்தியா அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்ட திருமாவளவன், அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், மத்திய அரசு இந்தத் தாக்குதல் எதிராக குரல் கொடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருவாரூா் ஆகிய நகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
பின்னர் பேரணியில் கலந்து கொண்ட ஷியா முஸ்லிம் அமைப்பினரை போலீசார் கைது செய்து அரசு பேருந்துகளிலும் போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்று சமூகக் கூடத்தில் அடைத்து வைத்தனர்.