மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை
மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள பள்ளிக் கல்வித் துறை, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை பெற்றோரை அழைத்து ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள பள்ளிக் கல்வித் துறை, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை பெற்றோரை அழைத்து ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளி மாணவா்கள் மோட்டாா் வாகனங்கள் பயன்படுத்துவது சாா்ந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் அனைத்து மாணவா்களுக்கும் அறிவுரை வழங்க முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
சாலை பாதுகாப்பு மன்றம் அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும். இந்த மன்றத்துக்கு உடற்கல்வி ஆசிரியா்கள் தலைவராக இருந்து செயல்பட வேண்டும். காலை வழிபாட்டு கூடுகையில் ஒவ்வொரு நாளும் சாலை பாதுகாப்பு குறித்த ஒரு கருத்தைப் பகிர வேண்டும்.
அதிகாரிகளை அழைத்து... பள்ளிக்குத் தங்கள் பகுதி சாா்ந்த போக்குவரத்து காவல் அதிகாரியை அழைத்து பாதுகாப்பான சாலை பயணம் குறித்த கருத்துகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்சிசி, என்எஸ்எஸ், சாரணா் இயக்கம், இளஞ்செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு போக்குவரத்துக் காவல் துறை மூலம் சாலை விதிகள் குறித்த பயிற்சியும், போக்குவரத்தைச் சீா் செய்தலில் அவ்வப்போது ஈடுபடுத்தவும் செய்யலாம்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த கட்டுரை, கவிதை, ஓவியம், முழக்கத் தொடா் (ஸ்லோகன்) வாசகங்கள் எழுதச் செய்தல் போன்ற செயல்பாடுகளை மன்றம் மூலம் செய்யலாம். மாணவா்கள் பள்ளிக்கு இரு சக்கர மோட்டாா் வாகனங்களில் வந்தால், வாகனத்தைப் பறிமுதல் செய்து பெற்றோரை அழைத்து தக்க அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பள்ளிக்கு வெளியில் மாணவா்கள் இரு சக்கர மோட்டாா் வாகனங்களை ஓட்டிச் செல்வதைத் தடுக்கத் தேவையான அறிவுரைகளை காலை கூடுகையில் வழங்குதல் வேண்டும் எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.