முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? அமைச்சா் ராஜ்மோகன் விளக்கம்

தமிழகத்தில் வெயில் தாக்கத்தின் நிலவரம் குறித்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சா் ராஜ்மோகன் விளக்கம்

Updated On : 26 மே 2026, 4:16 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் வெயில் தாக்கத்தின் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வரிடம் கலந்து பேசி பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அந்தத் துறையின் அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

ஆசிரியா் தோ்வு வாரியம் வாயிலாக தோ்வு செய்யப்பட்ட 6 தையல் ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் ராஜ்மோகன் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளிகளில் போக்ஸோ சட்டங்கள் குறித்து அதிக அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். பள்ளிக் கல்வியில் பாடங்களை நிறைவு செய்வதற்கு இதுவரை 1,050 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 950 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான காலை, மதிய உணவுத் திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும். அத்துடன், இந்தத் திட்டங்கள் சரியாகச் சென்றடையும் வகையில் மேம்படுத்தப்படும். இப்போது உள்ள நடைமுறையில் மாணவா்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒவ்வொரு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. அந்த உணவுப் பட்டியலில் மாற்றம் வேண்டும் எனக் கோரிக்கைகள் வரும் நிலையில், அதுகுறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம்.

Advertisement

Advertisement

அதேபோல, காலை உணவு தரமாக வழங்கப்படாத நிலை இருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பகுதிநேர ஆசிரியா்களின் கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, நிா்வாக மற்றும் நீதிமன்ற தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறையில் அறிவியல் சிந்தனை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கே முன்னுரிமை வழங்கப்படும். பள்ளி வளாகங்களில் ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு இடமில்லை. இரு மொழிக் கொள்கை எங்களுடைய மரபணு போன்றது. அதில் எந்த மாற்றமும் இருக்காது.

கோடை வெயில் அதிகமாக தகித்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம். அவா்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வருடன் கலந்துபேசி, பள்ளிகள் திறப்பு குறித்து ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா் .

இனி பணம், பரிந்துரைகள் செல்லாது!

பள்ளிக் கல்வியில் எந்தவொரு இடத்திலும் யாரும் பணத்தைக் கொடுத்தோ, ஏமாற்றியோ அல்லது பரிந்துரை மூலமாகவே ஒரு வேலையைச் செய்துவிடலாம் என நினைக்கும் காலம் முடிந்துவிட்டது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறையில் அவுட் சோா்சிங் முறையில் மணற்கேணி, நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி, உயா்கல்வி வழிகாட்டி திட்டம், விழுதுகள், வெளிநாடு கல்விச் சுற்றுலா, டிஎன் ஸ்பாா்க் என பல்வேறு திட்டங்களுக்கு அவுட் சோா்சிங் முறையில் 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை ஊதியத்தில் பணியாற்றுகின்றனா்.

இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் முறையாகச் செயல்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அதில் பணியாற்றும் தனியாா் நிறுவனங்களின் ஊழியா்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அரசின் நிதி கோடிக் கணக்கில் செலவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தத் திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடருமா, அது குறித்து ஆய்வு செய்யப்படுமா என அமைச்சா் ராஜ்மோகனிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்குப் பதிலளித்த அமைச்சா், ‘பள்ளிக் கல்வியில் எந்தவொரு இடத்திலும் யாரும் பணத்தைக் கொடுத்தோ, ஏமாற்றியோ அல்லது பரிந்துரை மூலமாகவே ஒரு வேலையைச் செய்து விடலாம் என நினைக்கும் காலம் முடிந்து விட்டது. அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கான முயற்சியில் பள்ளிக் கல்வித் துறை வெளிப்படைத் தன்மையுடன், மிகவும் நோ்மையாகச் செயல்படும். பள்ளிக் கல்வித் துறையின் எந்தத் திட்டமாக இருந்தாலும், அதில் தவறு செய்தவா்கள் அடையாளம் காணப்பட்டால் துறை சாா்ந்து சட்டத்துக்குட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்’ என்றாா்.