உங்க டூத் பேஸ்ட்ல உப்பிருக்கா? உங்க பாத்ரூம்ல கரப்பான் பூச்சி இருக்கா? உங்க சட்டைல காஃபிக் கறை இருக்கா? கணக்காக அடுத்து இப்படியும் கூட இனி விளம்பரங்கள் வரலாம். உங்க தேன்ல தேனீ இருக்கா?! இருந்தா தான் அது சுத்தமான தேன் இல்லனா அது பொய்த் தேன். என்று கூட யாராவது சொல்ல ஆரம்பிக்கலாம். ஏனெனில் ஒருமுறை வீட்டில் வாங்கி வைத்த தேனை மறந்து போய் பல நாட்கள் கழித்துப் பார்த்த போது தேன் பாட்டிலின் மூடிப் பகுதியெங்கும் கர கர வென்று துருப் பிடித்தது போல உதிர்ந்தது. அப்போது இருந்து தேன் வாங்கும் போதெல்லாம் நாம் வாங்கும் தேன் சுத்தமானது தானா! என்று ஒரு சந்தேகக் கேள்வி எழாமல் இருந்ததே இல்லை.
கேள்வி எழுந்த பிறகு பதிலுக்கான தேடலைத் தவிர்க்க முடியாது. ஒரு கப் கண்ணன் தேவன் டீயைத் தேடி ஒரு காலத்தில் ’இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா’ காடு, மலை, பாலைவனம் எல்லாம் தாண்டி ஓடுவார். எப்படியோ அந்த தூர்தர்ஷன் விளம்பரத்தின் முடிவில் அவருக்கு டீ கிடைத்து விடும். அப்படி நமக்கும் சுத்தமான தேனைக் கண்டடைய வழி கிடைக்காமலா போய் விடப் போகிறது!
தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான தன்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்தினால் உடல் எடை குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். அரை மூடி எலுமிச்சம் பழச்சாற்றில் அரை டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு கழுவினால் முகம் பளிச்சென்று மாறிவிடும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். தீக்காயங்களுக்கு தேன் தடவினால் காயம் சீக்கிரம் குணமாகும் என்கிறார்கள் சித்த வைத்தியர்கள். கைக்குழந்தை தூக்கம் மறந்து இரவெல்லாம் அவஸ்தைப் படுகிறதா? நாக்கில் தேன் தடவி தொட்டிலில் இட்டு ஆட்டினால் தொல்லையின்றி ஆழ்ந்து தூங்கி விடும் என்கிறார் பாட்டி. சிறுவர்கள் மாத்திரை விழுங்க கஷ்டப் படுகிறார்களா? தேனில் கரைத்து கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள் என்பது நமக்கே தெரியும்.
அவ்வளவு ஏன்? நமது தமிழ்நாட்டில் தொன்று தொட்டு ஒரு பழக்கம் உண்டு "பிறந்து மண்ணில் விழும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்ததும் 'சர்க்கரைத் தண்ணீர்' என்ற பெயரில் தேன் கலந்த நீரை நாக்கில் தடவும் பழக்கம் இருக்கிறது. இப்போது மருத்துவர்கள் அதெல்லாம் கூடாது என்று ஒதுக்கியும் கூட பாரம்பரியமாக இப்படி ஒரு சடங்கு பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதை இப்போதும் கிராமங்களில் இருப்போரிடம் கேட்டால் கூறுவார்கள். பிறந்த குழந்தைக்கு முதலில் சர்க்கரைத் தண்ணீர் தொட்டு வைப்பவர்கள் யாரோ? அவரது குணநலன்கள் தான் பின்னாட்களில் குழந்தைக்கு வாய்க்கும் என்பது ஐதீகம். ஆக இத்தனை வழிகளில் தேன் என்பது நமது வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்ட ஒரு விஷயம் என்பதை நம்மால் மறுக்க இயலாது.
ஆனால் பாருங்கள்...இத்தனை அவசியமான தேனை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று கடைக்குப் போகும் ஒவ்வொரு முறையும் எந்த பிராண்ட் தேன் வாங்குவது என்று கொஞ்சம் குழப்பமாகி விடுகிறது. உடனே பார்வையில் படுமாறு எது இருக்கிறதோ ’அது’ அல்லது 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்று எந்த பிராண்டில் தள்ளுபடி இருக்கிறதோ ’அது’ என்று பூவா! தலையா! போடாத குறையாகத் தான் நாம் தேன் வாங்கிக் கொண்டிருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு வரை தேன் வாங்க வேண்டுமென்றால் ஒன்று சர்வோதயாவில் கிடைக்கும் அல்லது தேனெடுக்கும் மலைவாழ் மக்கள் யாரிடமாவது சொல்லி வைத்து வாங்க வேண்டும் ஆனால் இப்போது பாருங்கள் தெரு மூக்கு கடைகளில் கூட லயன் ஹனி, டாபர் ஹனி இரண்டும் தண்ணீர் பட்ட பாடு. காந்தி கிராம பல்கலைக் கழக மாணவர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் தேன் இப்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. தேன் என்று பொதுப்படையாகச் சுட்டும் காலம் தாண்டி இப்போது வேப்பம்பூ தேன், துளசித் தேன், ஆர்கானிக் தேன் என்றெல்லாம் அதில் பல வகைகள் வந்து விட்டன.
எத்தனை வகைத் தேன் இருந்தாலும் அதில் சுத்தமான தேன் எது என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் போகிறபோக்கில் சிலருக்கு வரும் தானே! ஆர்வக் கோளாறில் சுத்தமான தேனைக் கண்டுபிடிப்பது எப்படி என்று இணையத்தில் தேடினால் கிடைக்கும் சரமாரியான பதில்களால் நமக்கு தேனில் மூழ்கிய ஈயைப் போல பெரும் திண்டாட்டமாகி விடுகிறது. இருந்தாலும் சில பரிசோதனைகள் மிக எளிமையானதாகத் தோன்றுவதால்... செய்து பார்க்கலாம்.
ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் தேன் விட்டுப் பாருங்கள். தேன் கரையாமல் தண்ணீர் நிறம் மாறாமல் அப்படியே இருந்தால் அது சுத்தமான தேன். கரைந்தால் அதில் வெள்ளைப் பாகு சேர்க்கப் பட்டிருக்கிறது என்று பொருள்.
ஒரு தீக்குச்சியை தேனில் நன்றாக மூழ்குமாறு முக்கி எடுங்கள், பிறகு அதைப் பற்ற வையுங்கள், தேன் அடர்த்தியானது அதனால் தீக்குச்சி எரிய சற்றுத் தாமதமாகலாம். ஆனாலும் எரிய வேண்டும் அப்படி தீக்குச்சி பற்றி எரிந்தால் அது சுத்தமான தேன். தேனில் முக்கி உரசும் போது தீக்குச்சி நமுத்துப் போனால் அந்தத் தேன் சுத்தமானது இல்லை.
ஒரு துளி தேன் எடுத்து உள்ளங்கையில் விட்டு, சுட்டு விரலால் வேகமாக தொடர்ந்து பரபரவென்று தேய்த்துப் பாருங்கள் உள்ளங்கையில் வெப்பம் பரவி சூடாக இருந்தால் தேன் சுத்தமானது. அப்படியல்லாது வெல்லப்பாகு போல பிசுபிசுப்பாக ஒட்டிக் கொண்டு விரலோடு திரண்டு வந்தால் அது கலப்படத் தேன்.
தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள வெளிநாட்டு ஆர்வலர் ஒருவர் தெரிவித்திருந்த செய்தி, ஒரு சின்னக் குப்பியில் தேன் எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஈயைப் பிடித்து அதனுள் மெதுவாக அழுத்த வேண்டும், சுத்தமான தேனாக இருந்தால் ஈயால் மீண்டும் எழுந்து பறக்க முடியும். கலப்படமானது என்றால் ஈ தேனில்மூழ்கி சாகும். ’ஈ’யைக் கொன்ற பாவம் பரவாயில்லை என்றால் இதை முயற்சிக்கலாம்.
இனிப்புகளைச் சுற்றி எறும்புகள் வருவது சகஜம். எறும்புகளை வைத்தும் தேனின் தூய்மையைப் பரிசோதிக்கலாம். தேன் பாட்டிலைச் சுற்றியும் எறும்புகள் நிச்சயம் வரும். ஆனால் அப்படி வரும் எறும்புகள் காலையில் எழுந்து பார்க்கும் போது இறந்து போய் பாட்டிலைச் சுற்றி விழுந்து கிடப்பின் அது சுத்தமான தேன். ஏனெனில் தேனில் இருக்கும் வெப்பம் எறும்புகளுக்கு ஒவ்வாதது. ஆசையில் தேனைச் சுற்றி எறும்புகள் வரும் ஆனால் சுத்தமான தேனின் வெப்பம் தாழாமல் இறக்கும்.
இது இன்னும் எளிதான முறை. தேனின் உறைநிலை என்பது மிகக் மிகக் குறைவானது. எனவே தேன் பாட்டிலை ஃபிரீஸரில் வைத்து விட்டு மறந்து விடுங்கள். நான்கைந்து நாட்களில் தேன் பாட்டிலில் தேன் உறைந்து விட்டால் அது கலப்படத் தேன். குறைந்த பட்சம் ஆறு மாதங்களாகியும் உறையாமல் அப்படியே இருந்தால் அது சுத்தமான தேன்.
அசைவப் பிரியர்களுக்கான ஒரு எளிய பரிசோதனை முறை. ஃபிரெஷ் ஆக மீன் வாங்கி அதை தேனில் முக்கி ஃபிரீஸரில் வையுங்கள். ஆறுமாதங்களுக்குப் பின்னும் மீன் கெடாமல் இருந்தால் அது சுத்தமான தேன். மூன்றே நாட்களில் மீன் நாறிப் போனால் அது கலப்படத் தேன்.
இந்த முறைகள் தவிர ஒரு துளி தேன் எடுத்து பிளாட்டிங் பேப்பர் அல்லது வெள்ளைப் பருத்தித் துணியில் விட்டுப் பார்க்கவும், பேப்பரோ, துணியோ தேனை உறிஞ்சிக் கொண்டால் அது கலப்படத் தேன். உறிஞ்சப்படாமல் இருந்தால் அது சுத்தமான தேன். இத்தனை பரிசோதனை முறைகளே போதும் தான்.
ஆனாலும் மேலே கண்ட முறைகள் எதுவும் சரிப்படவில்லை எனில் இன்னுமொறு எளிய வழிமுறை சொல்லாமல் விடுபட்டு விட்டது. பேசாமல் தேன் வாங்கியதும் தேன் பாட்டிலைத் திறந்து பாருங்கள் அதனுள் தேனீ இருந்தால் மட்டுமே அது தேன் கூட்டில் இருந்து பிரித்தெடுத்த சுத்தமான தேன் என்று கண்டடையுங்கள். :)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.