வீட்டைக் கட்டிப்பார் என்று சொன்ன காலம் முடிந்து, வீட்டுக் கடனை கட்டிப்பார் என்று சொல்லும் காலத்தில் இருக்கிறோம். வீட்டுக் கடனை கட்டி முடிக்கும்போது ஏற்படும் மன நிம்மதியை சொல்லில் சொல்லிவிட முடியாது என்று அனைவருக்குமே தெரியும். அந்த மகிழ்ச்சியில் மறக்கக் கூடாத சில வேலைகளும் இருக்கின்றன.
அதாவது, வீட்டுக் கடனை நிறைவு செய்துவிட்டோம், இனி வீடு முழுக்க நம்முடையது என்பதை உறுதி செய்ய சில ஆவணங்கள் முக்கியமாகிறது. அப்போதுதான் வீட்டின் மீது வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. முழு உரிமையும் வீட்டு உரிமையாளருக்கு சேரும்.
ஒரு வீட்டுக் கடனை செலுத்தி முடித்தும், உரியவர் வாங்க வேண்டிய ஆவணங்களும் அதன் முக்கியத்துவமும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.
கடன் கொடுத்தவரிடமிருந்து வாங்க வேண்டிய ஆவணங்கள்..
1. தடையில்லாச் சான்று
என்ஓசி எனப்படும் தடையில்லா அல்லது ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ். கடன் முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டதால், சொத்து மீது தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை கடன் கொடுத்த நிதி நிறுவனம் அல்லது வங்கி கொடுக்கும்.
பொதுவாக, வீட்டுக் கடன் பெறும்போது, வீட்டின் உண்மையான ஆவணங்களை நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் வாங்கி வைத்துக் கொள்ளும். கடன் நிறைவு பெற்றதும், அந்த ஆவணங்களை முறைப்படி உரியவரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒரு கடன் பெற்று, அது இத்தனை தவணைகளில் நிறைவு பெற்றுவிட்டது என்பதை, எத்தனை மாத தவணை, கடைசி தவணை பெற்றது உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் வங்கியிலிருந்து கொடுக்கப்படும்.
இதுவரை, அந்த வீட்டின் மீது, கடன் கொடுத்த நிறுவனத்துக்கு இருந்த உரிமை இனி இல்லை என்பதை உறுதி செய்யும் ஆவணம்தான் உரிமை விடுப்புச் சான்றிதழ். இதனை தவறாமல் பெற வேண்டும்.
ஒரு சொத்தின் மீது கடன் உள்ளிட்ட ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிவதுதான் வில்லங்கச் சான்று. எனவே கடன் முடிந்துவிட்டது, வீட்டின் மீது எந்த சட்டச் சிக்கலும், கடனும் இல்லை என்பதை உறுதி செய்யும் இந்த ஆவணத்தை உங்கள் பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்திலிருது பெற்றுக் கொள்ள வேண்டும்.
கடன் தவணை முடிந்து அடுத்த தவணை வரும்போது, உங்களது சிபில் அறிக்கையைப் பெற்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவரது கடன் அடைந்ததும் சிபில் ஸ்கோரிலும் அது முடிக்கப்படும்.
எனவே, இந்த ஆவணங்கள் அனைத்தையும் தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தவறினால், பின்னாள்களில் ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே கவனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.