ஃபார்மஸி துறை சார்ந்த படிப்புகளும் அவற்றுக்கான வேலை வாய்ப்புகளும்...
மருந்தில் பட்டயப் படிப்பு படித்துவிட்டால் சொந்தமாக மருந்துக் கடை வைத்து தொழில் செய்யலாம். பெண்கள் என்றால் மகளிர் குழு மூலம் அரசிடம் கடன் பெற்று மருந்துக் கடை வைக்கலாம்.
உலகம் முழுவதும் வேகமாக வளர்த்துவரும் துறைகளில் ஒன்று மருத்துவத்துறை. புதிய நோய்கள் வருவதுபோல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.
மருந்துகடை நடத்துவதற்கும், மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்கும் ஏணிப்படியாக உள்ளது பார்மஸி படிப்பு. டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட பார்மஸி கல்லூரிகள் உள்ளன.
பார்மஸி கல்லூரிகளில் மருந்தியல் இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பு, மருந்தியல் இளங்கலை நான்கு ஆண்டு பட்டப் படிப்பு, மருந்தியல் இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் மருந்தியல் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு ஆகியவை உள்ளன.
Advertisement
இது குறித்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மஸி கல்லூரி முதல்வர் பி.சோலைராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பில் சேருவதற்கு பிளஸ் டூ - வில் கணக்கு மற்றும் அறிவியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் 35 சதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இளங்கலை நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் சேருவதற்கு பிளஸ் டூ - வில் அறிவியல் பாடங்களில் 40 சதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் பட்டயப்படிப்பு படித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம்.
முதுகலை இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படிப்பில் சேருவதற்கு,இளங்கலையில் 50 சதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
முனைவர் பட்டம் பெற படிப்பதற்கு முதுகலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பார்மஸி கல்லூரியில் முதலில் உடல்கூற்றியல்,உடல் அமைப்பு, மருந்தாக்கவியல், மருந்தாக்க வேதியல், உயிர் வேதியல், மருத்துவமனைத் தொழில்நுட்பம், சிகிச்சை முறைகள், சுகாதாரம், நல வாழ்வு, சமுதாயக்கல்வி, தாவரங்களிலிருந்து மருந்து தயாரிப்பு உள்ளிட்ட பாடங்கள் வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆய்வுகூடத்தில் மருந்து தயாரிப்பு, டானிக் தயாரிப்பு, மருந்துகளை மிருகங்களுக்கு செலுத்தி ஆய்வு செய்வது ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இரண்டு ஆண்டு மருந்தியல் பட்டயப் படிப்பில் அரசு மருத்துவமனையில் மூன்று மாதம் பயிற்சி பெற வேண்டும். மருத்துவக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள இணை இயக்குநர்(மருந்தியல்துறை) மூலம் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் பயிற்சி பெற அனுமதி பெறப்படும். மாணவர்களின் சொந்த ஊர்களில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி பெறலாம். மருத்துவமனையில் பயிற்சி முடிந்ததும் தலைமை மருத்துவர் சான்றிதழ் அளிப்பார்.
மருந்தில் பட்டயப் படிப்பு படித்துவிட்டால் சொந்தமாக மருந்துக் கடை வைத்து தொழில் செய்யலாம். பெண்கள் என்றால் மகளிர் குழு மூலம் அரசிடம் கடன் பெற்று மருந்துக் கடை வைக்கலாம்.
மருந்து தயாரிக்கும் ஆலைகளில் உதவியாளராக வேலையில் சேரலாம். அரசு மருத்துவமனையில் பார்மஸிஸ்ட் வேலைக்குச் சேரலாம்.
நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பிலும் மேற்கூறிய பயிற்சி அளிக்கப்படும்.
மருந்து பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்படும். மூன்றாம் ஆண்டு, மருந்து தயாரிக்கும் ஆலைகளில் ஒரு மாதம் பயிற்சி பெற வேண்டும்.
பின்னர் புதிய மருந்து கண்டுபிடித்து திட்ட அறிக்கை தயார் செய்து, கருத்தரங்கில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மருந்தியல் சட்டம் குறித்தும் பாடங்கள் நடத்தப்படும்.
முதுகலை மருந்தியல் இரண்டு ஆண்டு பட்டப்படிப்பில் 12 உட்பிரிவுகள் உள்ளன.
எங்கள் கல்லூரியில் மருந்தியல், மருந்தாக்கவியல், மருந்து ஆய்வு ஆகிய மூன்று பிரிகள் உள்ளன.
மருந்து தரக்கட்டுப்பாடு குறித்து கண்டுபிடிக்க போதுமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு மருந்தினை மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் கொடுத்தால் அதில் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தெரிந்து கொள்ள பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பின்னர் இது குறித்து ஆய்வு செய்து திட்டஅறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மருந்தியல் முனைவர் பட்ட ஆய்வுப்படிப்பு என்பது முழுக்க முழுக்க புதிய மருந்து குறித்த ஆய்வு படிப்பாகும்.
இந்த படிப்பு படித்தால் மருந்து ஆய்வுக்கூடத்தில் தலைமை பொறுப்பு ஏற்கலாம்.
மொத்தத்தில் பார்மஸி கல்லூரியில் உள்ள எந்தப்படிப்பு படித்தாலும் நூறு சதம் வேலைவாய்ப்பு உறுதி எனலாம்.'' என்றார் சோலை ராஜன்.