மாறிவரும் வாழ்க்கைச் சூழலால் குழந்தைகளுக்குக்கூட உடல் பருமன், நீரிழிவு மற்றும் உடல் சார்ந்த பிற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
'தி லான்செட் சைல்டு & அடாலசென்ட் ஹெல்த்' என்ற இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகளவில் கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
19 வயதுக்குள்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பு இருப்பதாகவும் இதற்கு உடல் பருமன் முக்கியக் காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. எனினும் ஆறுதல் தகவலாக, உணவுப்பழக்கவழக்கம், உடல் செயல்பாடுகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இந்த நிலைமையை சரிசெய்ய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவை இப்போது இல்லையென்றாலும் பிற்காலத்தில் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஆய்வுத் தகவல்
19 வயதுக்குள்பட்ட சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உலகளவில் 11.4 கோடி குழந்தைகள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு குழந்தைகளிடையே 3.2% ஆக இருந்த உயர் ரத்த அழுத்த பாதிப்பு 2020ல் 6.2% ஆக அதிகரித்துள்ளது. மேலும் கூடுதலாக 8.2% குழந்தைகள் உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயர் ரத்த அழுத்தம் சிறு வயதில் தொடங்கி 14 வயதில் உச்சத்தை அடைகிறது, சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது, அதாவது சிறுவர்களிடம் 3.4%-லிருந்து 6.5% ஆகவும் சிறுமிகளிடம் 3.02% - லிருந்து 5.82% ஆகவும் அதிகரித்துள்ளது.
தீர்வு என்ன?
குழந்தைப் பருவத்தில் அதிக எடை கொண்டிருப்பது, டைப் 2 நீரிழிவு, இதய நோய் போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. குழந்தைகள் உடல் பருமன் கொண்டிருந்தால் கற்றல் செயல்திறன், பாகுபாடு உள்ளிட்டவற்றால் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படலாம். மேலும் உடல் பருமனுள்ள குழந்தைகள் எதிர்காலத்தில் உடல் பருமன் கொண்ட பெரியவர்களாக மாறும் வாய்ப்பும் அதிகம்.
மிகவும் மோசமான உணவுப்பழக்கவழக்கம், உடல் செயல்பாடு இல்லாதது, குடும்பத்தில் யாருக்கேனும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது, பள்ளியில் மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் பருமன் ஆகியவை குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தத்திற்கான முக்கிய காரணங்கள்.
குழந்தைகள் அதிகமாக ஸ்மார்ட்போன், டிவி அதிகம் பார்ப்பதால் உடல் செயல்பாடுகள் குறைகின்றன. அவர்களின் உணவுப்பழக்கவழக்கம் மாறிவிட்டது. பல்வேறு உடல் கோளாறுகளை படிப்படியாக ஏற்படுத்துவதாகவும் ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்களால் இவை சரிசெய்யக்கூடியவை என்று சிம்ஸ் மருத்துவமனையின் குழந்தை நல மூத்த மருத்துவர் டாக்டர் சுபாஷ் சந்திர போஸ் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "குழந்தைகளின் ரத்த அழுத்தத்தை முன்கூட்டியே கண்டறிந்தால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க முடியும். ஆனால் குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் எதுவும் பெரிதாகத் தெரியாது. எனவே, குழந்தைகளுக்கு காலையில் தலைவலி, வழக்கத்தைவிட அதிக சோர்வு, எரிச்சல், சிறிய வேலைகளுக்கே மூச்சுத்திணறல், திடீர் எடை அதிகரிப்பு, இரவில் குறட்டை விடுதல் போன்ற அறிகுறிகள் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது அவசியம்" என்றும் கூறினார்.
பெரியவர்களிடம் இருப்பதுபோல அல்லாமல் குழந்தைகளிடம் காரணமின்றி உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. ஒருவேளை அது கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்தால் சரியாகிவிடும் என்று காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜனனி சங்கர் தெரிவித்தார்.
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளுக்கு 3 வயது முதல் ரத்த அழுத்தத்தை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
பிறக்கும்போது குழந்தை அதிக எடை, குறைப்பிரசவம், சிறுநீரகப் பிரச்னைகள் அல்லது மற்ற உடல் நலக் கோளாறுகள் இருந்தால், குடும்பத்தில் யாருக்கேனும் ரத்த அழுத்தம் இருந்தால் கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும்.
குழந்தைகள் தினமும் குறைந்தது 40-50 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
பிஸ்கட், பேக்கரி உணவுகள், சிப்ஸ், செயற்கை சர்க்கரை பானங்கள், துரித(ஃபாஸ்ட் ஃபுட்) மற்றும் பொருந்தா(ஜங்க் ஃபுட்) உணவுகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
உணவில் உப்பு அளவாக இருக்க வேண்டும். எண்ணெய்யும் குறைவாக பயன்படுத்தினால் நலம்.
உணவில் அதிக பழங்கள், காய்கறிகள் இருக்க வேண்டும். எப்போதும் வீட்டில் சமைத்த உணவுகளையே கொடுப்பது நல்லது.
குழந்தைகள் வயதுக்கேற்ப தூக்கம் சீராக இருக்க வேண்டும் என்று டாக்டர் சுபாஷ் தெரிவித்தார்.
நகர்ப்புறத்தில் உள்ள குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதாக சென்னை காவேரி மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் டாக்டர் புஷ்கலா கூறினார். ஆபத்து காரணிகள் உள்ள குழந்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் சிறந்த கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"2023ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 8.4% குழந்தைகள் உடல் பருமன் கொண்டவர்களாகவும் 12.4% பேர் அதிக எடையுடனும் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஓர் அதிர்ச்சித் தகவலாக வீட்டில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குழந்தைகள் அதிகமாக உடல் பருமனுக்கு ஆளாவதாகக் கூறப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் குழந்தைகளிடையே உடல் பருமன் பாதிப்பு சுமார் 11% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்" என்றும் மருத்துவர் புஷ்கலா கூறினார்.
அதனால் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படாதவாறு சரியான வாழ்க்கை முறையை பெற்றோர்கள் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே உடல் பருமன் இருந்தால் உடனடியாக வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமாக சரிசெய்துகொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.